ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்: கோப்புப்படம் 
இந்தியா

ஏழைகளுக்குப் பணம் கொடுங்கள்; பொருளாதாரத்தை பிரதமர் அலுவலகம் தனியாக மீட்க முடியாது; எதிர்க்கட்சியினருடன் ஆலோசியுங்கள்: ரகுராம் ராஜன் கருத்து

பிடிஐ

கரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பொருளாாதாரத்தை மீட்க மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி நிதித்தொகுப்புத் திட்டம் போதாது. ஏழைகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் தானியங்களும் பணமும் தேவை. ஏழைகள் கைகளில் மத்திய அரசு பணம் கொடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பொருளாதாரப் பாதிப்பிலிருந்து தேசத்தை பிரதமர் அலுவலகம் மட்டும் தனியாக மீட்க முடியாது. அரசியல் வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள், தேசத்தில் சிறந்த அறிவார்ந்தவர்களை அழைத்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பிலிருந்து தேசத்தை மீட்க ரூ.21 லட்சம் கோடி தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். அதற்குரிய திட்டங்களுக்கான 5 கட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் அறிவித்தார். இந்தத் திட்டங்களில் அறிவிக்கப்பட்ட நிதி போதாது, ஏழைகளுக்கு நேரடியாகப் பணத்தை வழங்கிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கரோனா வைரஸால் உலகமே மிகப்பெரிய அவசர நிலையைச் சந்தித்து வருகிறது. அனைத்து வளங்களும் போதுமானதாக இல்லை என்பதுபோலவே தோன்றுகிறது. இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள், பல ஆண்டுகளாக பொருளாதாரச் சிக்கலில் குறைந்து வரும் பொருளாதார வளர்ச்சி, நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு போன்றவை இருக்கும்போது கரோனா வந்து மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து மீண்டும் இயல்புப்பாதைக்கு கொண்டுவர அதிகமான மீட்பு நடவடிக்கைகளை, உள்ளீடுகளை அரசு செய்ய வேண்டும்.

மத்திய அரசு அறிவித்த பொருளாதார மீட்புத் திட்டங்களில் சில நல்ல அம்சங்களும் இருக்கின்றன. இருந்தாலும்கூட பொருளாதாரத்தை இயல்புப் பாதைக்குக் கொண்டுவர இந்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டம் நிச்சயம் போதுமான அளவில் இருக்காது. இன்னும் அதிகமாகத் தேவைப்படும் என்றே நினைக்கிறேன்.

கரோனாவால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, மக்களையும், நிறுவனங்களையும் மீட்க மத்திய அரசு அதற்குரிய வழிகளைக் கண்டுபிடிப்பது அவசியம். பொருளாதாரத்தில் கரோனா வைரஸால் சேதமடைந்த பகுதிகளைக் கண்டுபிடித்துச் சரிசெய்வது அவசியம்.

சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிகமான நிதி உதவியையும் வழங்கிட வேண்டும், பொருளாதாரக் கொள்கையில் சீர்திருத்தம் செய்யவேண்டும். ஆனால், இப்போது அறிவித்துள்ள பொருளாதார நிதித் தொகுப்புத் திட்டம் பொருளாதாரத்தை மீட்பதற்கான பிரச்சினைகளையும் அடையாளம் காணவில்லை, புலம்பெயர் தொழிலாளர்களின் கவலைகளைத் தீர்ப்பதிலும் தோல்வி அடைந்துவிட்டது.

கரோனா பரவலைத் தடுக்க லாக்டவுன் கொண்டுவரப்பட்டு பொருளாதாரச் செயல்பாடுகள் தேக்கமடைந்தபின், புலம்பெயர் தொழிலாளர்கள் கைவிடப்பட்டு விட்டார்கள். வேலையிழந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியங்களை அரசு இலவசமாக வழங்கலாம். ஆனால், அது நிச்சயம் அவர்களுக்குப் போதுமானதாக இருக்காது

புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், ஏழைகளுக்கும் அதிகமான பணத்தை வழங்கிட வேண்டும். தேவையான அளவுக்கு உணவு தானியங்களையும் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் காய்கறிகள் வாங்கவும், சமையல் எண்ணெய் வாங்கவும், வாடகை செலுத்தவும் பணம் தேவை. ஆதலால் உணவு தானியங்களோடு அவர்களுக்குப் பணமும் வழங்க மத்திய அரசு முயல வேண்டும். பொருளாதாரத்தைக் காப்பதும், மக்களைக் காப்பதும் மிகவும் முக்கியம்.


மத்திய அரசு தன்னால் எந்த அளவுக்கு அளவுக்கு முடியுமோ அந்த அளவு பொருளாதாரத் திட்டங்களை அறிவித்து பொருளாதாரத்தை உந்தித் தள்ள வேண்டும். இதுபோன்ற அதிகமான மீட்பு நடவடிக்கை இல்லாவிட்டால், பொருளாதாரம் இன்னும் மோசமாகச் சென்று வலுவிழந்துவிடும்.

கரோனா பாதிப்பிலிருந்து தேசத்தின் பொருளாதாரத்தை மீட்க பிரதமர் அலுவலகம் மட்டும் தனியாகச் செயல்பட்டால் முடியாது. அரசியல் வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சியில் உள்ள சிறந்த அறிவார்ந்தவர்களையும், சமூகத்தில் உள்ள அறிவார்ந்தவர்களையும் அழைத்து ஆலோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் சூழல் மிகவும் மோசமாகிவிடும்.

கரோனா மற்றும் லாக்டவுனால் மட்டும் ஏற்பட்டுள்ள பொருளாாதாரச் சேதத்தைச் சரிசெய்வது மட்டும் சவால் அல்ல. இதை அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தியாவில் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பதால் ரேட்டிங் ஏஜென்சி நிறுவனங்கள் என்ன செய்வார்கள் என்று மத்திய அரசு கவலைப்படக்கூடாது. மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மக்களையும், பொருளாதாரத்தையும் காயத்திலிருந்து குணப்படுத்தும்.

பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க மக்களுக்குச் செலவு செய்வதும், செலவீனத்தை அதிகப்படுத்துவதும் அவசியம் என்று இந்த ரேட்டிங் நிறுவனங்களே தெரிவித்துள்ளன. அப்படிச் செய்தால்தான் இந்தியா விரைவில் தனது பொருளாதாரத்தை இயல்புப்பாதைக்குக் கொண்டு செல்ல முடியும்.

பசியோடு இருக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பது என்பது தாமதமாகத்தான் வேலை செய்யும். ஏற்கெனவே கடன் பெற்று தொழில் செய்து வரும் சிறு, குறு நிறுவனங்கள் மத்திய அரசு அளிக்கும் கடனால் மேலும் கடனாளி நிறுவங்களாக மாறக்கூடும்''.

இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT