மேற்கு வங்க மாநிலத்தில் 80 பேரின் உயிரைக் காவு வாங்கி, ஏராளமான சேதத்தை ஏற்படுத்திய உம்பன் சூப்பர் புயலின் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று காலை கொல்கத்தா சென்றடைந்தார்.
கடந்த 83 நாட்களுக்குப் பின் பிரதமர் மோடி டெல்லியை விட்டு வெளிமாநிலத்துக்குச் சென்றுள்ளார். கடைசியாக கடந்த பிப்ரவரி 29-ம் தேதி உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ், சித்ரகூட் நகரங்களுக்கு பிரதமர் மோடி பயணம் சென்றார். அதன்பின் இப்போதுதான் டெல்லியை விட்டு வெளி மாநிலம் சென்றார்.
கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார். அதன்பின் அவருடன் சேர்ந்து, உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் பார்வையிடும் பிரதமர் மோடி, நிவாரணங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.
வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் 20-ம் தேதி பிற்பகலில் மேற்கு வங்கம் வங்கதேச கடல் பகுதி வழியாக கரையைக் கடந்தது.
உம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு பர்கானா, தெற்கு 24 பர்கானா மாவட்டங்கள் முற்றிலும் நாசமடைந்துள்ளன. இந்த மாவட்டத்தை மறுகட்டமைப்பு செய்யும் அளவு புயல் கடும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. கொல்கத்தா, கிழக்கு மிட்னாபூர், ஹராவிலும் புயலால் சேதங்கள் ஏற்பட்டாலும் இரு மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் குறைவுதான்.
நார்த் 24 பர்கானாவில் 17 பேர், கொல்கத்தவில் 15 பேர், பசிராத்தில் 10 பேர், புயல் கரையைக் கடந்த சுந்தரவனக்காடுகள் அடங்கிய தெற்கு பர்கானாவில் 4 பேர் என மொத்தம் 80 பேர் புயலுக்குப் பலியாகியுள்ளனர் என மேற்கு வங்க அரசு தெரிவிக்கிறது.
லட்சக்கணக்கான வீடுகள், பாலங்கள், கடைகள் புயல் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. மேற்கு வங்கதில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
மேற்கு வங்கப் பயணத்தை முடித்துக்கொண்டு ஒடிசாவுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு விமானம் மூலம் உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நவீன் பட்நாயக்குடன் சேர்ந்து பார்வையிட உள்ளார்.