மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாட்டில் உள்ள சமுதாய வானொலிகளின் மூலம் நாளை உரையாற்றுகிறார்.
மக்களைச் சென்றடையும் தனித்தன்மை வாய்ந்த, புதிய முயற்சியாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாட்டில் செயல்பட்டுவரும் சமுதாய வானொலிகளின் மூலமாக நாளை 22 மே 2020 அன்று மாலை 7 மணிக்கு உரையாற்றுவார். இந்த உரை, இரண்டு பிரிவுகளாக ஒலிபரப்பப்படும். ஒன்று இந்தியில். மற்றொன்று ஆங்கிலத்தில். அமைச்சரின் உரையைக் கேட்க விரும்புபவர்கள், இந்தி உரையை இரவு ஏழரை மணிக்கும், ஆங்கில உரையை இரவு ஒன்பது பத்து மணிக்கும் அகில இந்திய வானொலியின் எஃப்எம் கோல்ட் 100.1 MHz அலைவரிசையில் கேட்கலாம்.
கோவிட்-19 தொடர்பான தகவல்கள் நாட்டிலுள்ள அனைத்துப் பிரிவு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த உரை ஒலிபரப்பு முயற்சி அமையும். நாட்டில் சுமார் 290 சமுதாய வானொலி நிலையங்கள் உள்ளன. நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு ஒரு மிகப்பெரிய தளத்தை இவை அமைத்துக் கொடுக்கின்றன.
இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளிலும் உள்ள மக்களையும் சென்றடைவதற்கு, இந்த வானொலி நிலையங்களின் சக்தியைப் பயன்படுத்திக் கொள்வதே, இந்த உரையின் நோக்கமாகும். அனைத்து சமுதாய வானொலி நிலையங்களின் மூலமாகவும், வானொலி நேயர்களிடையே அமைச்சர் ஒரே சமயத்தில் உரையாற்றுவது, இதுவே முதன்முறையாகும். சமுதாய வானொலி நிலையங்களிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கும் அமைச்சர் தனது உரையின் போது பதிலளிப்பார்.