இந்தியா

ஆரோக்கிய சேது செயலியில்  ‘சிவப்பு’ காட்டினால் அனுமதி இல்லை: விமானப் பயணங்களுக்கு புதிய கெடுபிடிகள்

செய்திப்பிரிவு

மே 25-ம் தேதி முதல் நாட்டில் விமான சேவைகள் தொடங்குகின்றன. இதில் ஆரோக்கிய சேது செயலியில் சிவப்பு அடையாளம் காட்டினால் அந்தப் பயணிகள் விமானத்தில் பயணிக்க அனுமதி கிடையாது என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய பயண வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இணையதளத்தில் உறுதி செய்யப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே விமானப் பயணத்துக்கு அனுமதி என்பதால் விமான நிலையத்தில் பயணிகளுக்கு நேரடி செக்-இன் கிடையாது.

முதற்கட்டமாக பயணிகள் ஒரு ஹேண்ட்பேக் மற்றும் 20 கிலோ எடை கொண்ட ஒரு செக் - இன் பேக் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது. இது ஏர்லைன்ஸ் கூறுவதற்கேற்ப அமையும்.

நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வருபவர்கள் பயணிக்க அனுமதி கண்டிப்பாக கிடையாது. அதேபோல் கரோனா பாசிட்டிவ் நோயாளிகளுக்கும் அனுமதி இல்லை.

பயணிகள் தங்கள் ஆரோக்கியத்தை ஆரோக்கிய சேது ஆப் மூலம் நிரூபிக்க வேண்டும். அல்லது சுய அறிக்கை படிவம் மூலம் செய்யலாம்.

விமானப்பயணம் செய்யக்கூடாது என்று தடை செய்யப்பட்ட நபர் விமானத்தில் பயணித்தால் தண்டனை நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும் விமானத்தில் கழிவறையை குறைந்த அளவில் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கழிவறை வாசலில் வரிசையாகக் காத்திருக்க அனுமதி இல்லை. அதேபோல் குழந்தையுடனும் வயதானவருடனும் ஒரேயொருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

உடல் ரீதியான தொடர்பைத் தடுக்க விமானத்தில் எந்த பொருளும், தின்பண்டங்களும், உணவுப்பொருள் விற்பனையும் சப்ளை இல்லை. பயணிகள் விமானத்தில் உள்ளே எதையும் உண்ண அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

எந்த ஒரு பயணியாவது உடல்நலக் குறைவாக உணர்ந்தால், களைப்பாக உணர்ந்தால், இருமல் இருந்தால் உடனே அதனை ஊழியரிடம் தெரிவிக்க வேண்டும்.

ஏர்லைன்ஸ் பாதுகாப்புக் கவசங்கள், கைக்கிருமி நாசினி, முகக்கவசங்களை அளிக்க வேண்டும்.

விமானப் பணியாளர்கள் முழு உடல் கவசத்துடன் இருப்பது அவசியம்.

SCROLL FOR NEXT