நாடு முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் உணவகங்கள், சிற்றுண்டி கடைகளைத் திறக்க ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளது. ஆனால், அனைத்துப் பயணிகளும் பார்சல் வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி பதப்படுத்தப்பட்ட உணவுகள், பார்சல் உணவுகள், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், புத்தக நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களைத் திறந்து பயணிகளுக்கு வழங்கும்போது அந்தந்த ரயில்வே மண்டலங்கள், வாரியத்தின் வழிகாட்டி விதிமுறைகள்படி செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து ரயில் நிலையங்களில் மூடப்பட்டிருந்த உணவகங்கள், சிற்றுண்டி கடைகளைத் திறக்க மண்டல ரயில்வே நிர்வாகமும், ஐஆர்சிடிசியும் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்கலாம். உணவகங்கள், ஓய்வறைகள் ஆகியவற்றில் உணவு சாப்பிடுவதற்கு அனுமதியில்லை. பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கர்நாடக மாநிலத்துக்குள் மட்டும் ரயில் போக்குவரத்து நாளை முதல் தொடங்கப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் மற்றொரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் கோரிக்கையை ஏற்று கர்நாடக மாநிலத்துக்குள் மட்டும் ரயில்வே போக்குவரத்து தொடங்க ரயில்வே துறை சம்மதித்துள்ளது. இந்த ரயில் போக்குவரத்து கர்நாடக மாநிலத்தின் புறநகர்களுக்கு மட்டும் இயக்கும் வகையில் இருக்கும்.
முதல் கட்டமாக 2 ஜோடி ரயில்கள் பெங்களூரு முதல் மைசூரு நகரம் வரை வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படாது. பெங்களூரு, பெலகாவி இடையே வாரத்தில் 3 நாட்களுக்கு இயக்கப்படும். இந்த சூப்பர் ஃபாஸ்ட் ரயில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் இயக்கப்படும். இரு நகரங்களுக்கு இடையே 10 நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்தப் போக்குவரத்து 22-ம் தேதி (நாளை) தொடங்கும். பெங்களூருவுக்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் பெலகாவியிலிருந்து இயக்கப்படும். பயணிகள் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்படுவார்கள்.
இந்த ரயிலில் 14 சேர்கார் பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள், பிரேக்வேன் என மொத்தம் 1,484 பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில் இயக்கப்படும். இதுதவிர புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் ஷ்ராமிக் சிறப்பு ரயில், புதுடெல்லி, பெங்களூரு இடையே ராஜ்தானி சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் லாக்டவுன் என்பதால் அன்று மட்டும் ரயில் போக்குவரத்து இருக்காது. பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்துக்கு வந்து டிக்கெட் பெற முடியாது. அனைத்துப் பயணிகளும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்று பயணிக்க வேண்டும். ரயில் புறப்படும் முன்பும், சென்று சேரும் இடத்திலும் தெர்மல் ஸ்கேனிங் பயணிகளுக்குப் பரிசோதிக்கப்படும். அதில் பயணிகளுக்கு கரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.