இந்தியா

விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம்: தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை இல்லை- உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவத்தில் , தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) வழங்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் இருந்து, கடந்த 7-ம் தேதி அதிகாலையில் விஷ வாயு கசிந்தது. இந்தவிஷ வாயு காற்றில் பரவியதால், தொழிற்சாலையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மயங்கி விழுந்தனர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாகமுன்வந்து வழக்கு பதிவு செய்து, ரூ.50 கோடியை வைப்புத் தொகையாக செலுத்த எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நேற்று முன்தினம் நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, என்ஜிடி உத்தரவுக்கு இடைக்காலதடை விதிக்க வேண்டும் என கோரினார்.

ஜூன் 8-ல் விசாரணை

மனுவை விசாரித்த நீதிபதிகள், “என்ஜிடி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது. இதுதொடர்பான விசாரணை ஜூன் 1-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ளது. அப்போது விவாதங்களை வைத்துக் கொள்ளலாம். மேலும் எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்” என்றனர்.

SCROLL FOR NEXT