மத்திய பிரதேசத்தில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 22 பேருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட முன்னுரிமை வழங்கப்படும் என்று அந்த மாநில பாஜக தலைவர் ஷர்மா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அக்கட்சியின் கமல்நாத் முதல்வராக பதவி வகித்தார். இந்நிலையில், கமல்நாத்துக்கும் காங்கிரஸ் மூத்ததலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியசிந்தியா பாஜகவில் இணைந்தார். முன்னதாக, அவரது ஆதரவாளர்களான 22 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினமா செய்தனர். அவர்களும் பாஜகவில் இணைந்தனர்.
இதன் காரணமாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த மார்ச் 23-ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் காலியான 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் காங்கிரஸ், பாஜக கட்சிகளைச் சேர்ந்த தலாஒரு எம்எல்ஏ மறைவால் 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 24சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் செப்டம்பர் மாதத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய பிரதேசபாஜக தலைவர் வி.டி.ஷர்மா கூறியதாவது:
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 22 பேர் மிகப்பெரிய தியாகத்தை செய்துள்ளனர். சிலர் அமைச்சர் பதவியில் இருந்தும் விலகியுள்ளனர். எனவே வரும் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அவர்கள் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். வேட்பாளர் தேர்வில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவிக்கும்.
வேட்பாளர் தேர்வு தொடர்பாக இப்போதே ஆன்லைனில் ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும்ஆன்லைன் வாயிலாக இடைத்தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளோம். பாஜக தொண்டர்கள் அனைவரும் கரோனா வைரஸுக்கு எதிராக தீவிரமாக போரிட்டு வருகின்றனர். அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.