குஜராத்தில் படேல் சமூகத்தினர் பந்த் நடத்தியதில் நிகழ்ந்த வன்முறைக்கு 9 பேர் பலியாகியுள்ளனர், பலியானோர் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அளிக்கவில்லையெனில், பால் மற்றும் காய்கறிகள் கிடைக்க விடாமல் செய்வோம் என்று ஹர்திக் படேல் எச்சரித்துள்ளார்.
படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டத்தால் குஜராத்தின் வன்முறை வெடித்துள்ள நிலையில், இந்தப் போராட்டத்தை முன்நின்று நடத்தி வரும் ஹர்திக் படேல், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, “பலியானோர் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அளிக்கவில்லையெனில், விவசாயிகளை அழைத்து பால் மற்றும் காய்கறிகளை சப்ளை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துவோம்.
குழந்தைகளும் பெண்களும் காயமடைந்துள்ளனர். இதற்குக் காரணமான போலீஸ் அதிகாரிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
மாநில அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால் அவர்கள் பதில் அளித்தேயாக வேண்டும். எங்களது அமைதிப் போராட்டம் தொடரும், ஆனால் வன்முறையை எங்கள் மீது பிரயோகித்தால் நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது” என்றார் ஹர்திக் படேல்.
முன்னதாக, குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் பெரும்பான்மை இனத்தவர்களாக உள்ளனர். இவர்கள் தற்போது முற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளனர். தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பிரிவில் சேர்க்க வேண்டும் என்று படேல் சமூகத்தினர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) குஜராத்தில் திடீரென 10 லட்சத்துக்கும் மேற்பட்ட படேல் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்று (புதன்கிழமை) நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் போலீஸார் தடியடி நடத்தி கும்பலை கலைக்க முயற்சித்தனர். மேலும் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஹர்திக் படேல் (22) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதனால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. 50-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் தீ வைக்கப்பட்டன. கடைகள், அரசு அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் ஏராளமான பொது சொத்துக்கள் சேதம் அடைந்தன.
இதற்கிடையில் செவ்வாய்க் கிழமை நடந்த வன்முறையில் 6 பேர் பலியாயினர். இதில், 5 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு நடந்த கலவரத்தில் மேலும் 3 பேர் இறந்தனர். கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.