புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் முயற்சியில் 1000 பேருந்துகளை தங்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்தார் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, ஆனால் அதிலிருந்து பிரச்சினைகள் உ.பி.அரசுக்கும் இவருக்கும் தொடங்கியது.
இதனையடுத்து உ.பி. அரசு மீது விமர்சனம் வைத்த பிரியங்கா காந்தி ‘உ.பி.அரசு எல்லை மீறுகிறது’ என்றார். மேலும் ட்விட்டரில், “கடும் சிக்கலில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அரசியலை தள்ளி வைக்கும் வாய்ப்பை பாஜக அரசு வழங்கவில்லை. இந்த முயற்சிக்கு எத்தனை இடையூறுகள் செய்ய முடியுமோ அத்தனை இடையூறுகள் செய்கின்றனர்’ என்று ட்வீட் செய்தார்.
நேற்று ஆயிரம் பஸ்கள் என்று கூறி ஆட்டோக்கள், கார்கள், இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களை அளித்ததாக உ.பி. அரசு காங்கிரஸ் மீது மோசடிப் புகார் தொடுத்தது. இதனையடுத்து பிரியங்கா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் சந்தீப் சிங் மற்றும் உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லாலு ஆகியோர் தவறான தகவல்களை அளித்ததாக வழக்குப் போடப்பட்டுள்ளது.
மாநில எல்லையில் பேருந்துகளை உ.பி. போலீஸார் மடக்கி நிறுத்தி வைத்ததையடுத்து பிரியங்கா காந்தி தன் ட்வீட்டில், “பேருந்தில் பாஜக பேனர்களை வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்., ஆனால் எங்கள் சேவைகளைத் தடுக்காதீர்கள் இந்த அரசியலினால் 3 நாட்கள் விரயம் செய்யப்பட்டு விட்டன. பல தொழிலாளர்கள் தங்கள் உயிர்களை விட்டுள்ளனர்” என்று பதிவிட்டார்.
இதனையடுத்து இந்தப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை என்று தெரிகிறது.