இந்தியா

உம்பன் புயலின் வேகத்தாக்கம்: ஒடிசாவில் 1.20 லட்சம் பேர் வெளியேற்றம் 

ஏஎன்ஐ

புதன்கிழமையான இன்று உம்பன் புயல் மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹேடியா தீவு ஆகியவற்றுக்கிடையே கரையைக் கடக்கவுள்ளதால் சூப்பர் புயலான இதன் பாதிப்பை கருத்தில் கொண்டு ஒடிசாவின் பாதிப்பு அதிகம் ஏற்படும் 13 மாவடடட்டங்களிலிருந்து சுமார் ஒரு லட்சம் பேர் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சூப்பர் புயல் உம்பன் காரணமாக ஒடிசாவில் கனமழை கடும் காற்றுடன் பெய்து வருகிறது. சூப்பர் சைக்ளோன் உம்பனுக்காக சுமார் 1,704 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. ஒடிசாவின் கேந்த்ராபுராவிலிருந்து அதிகபட்சமாக 32, 060 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பத்ராக் பகுதியிலிருந்து 26,174 பேர்களும் பாலசோரிலிருந்து 23,142 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சூப்பர் புயல் நெருங்க நெருங்க மக்கள் மத்தியில் பீதி அலை உருவாகியுள்ளது. பராதிப் அருகே மதியம் புயல் கடக்கும் என்று கூறியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதனையடுத்து மக்கள் தங்கள் முக்கிய ஆவணங்கள் பொருட்களுடன் ஆபத்தான பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அதி தீவிர சூப்பர் புயலான உம்பன் தற்போதைய வானிலை மைய தகவலின் படி ஒடிசாவின் பராதீப்பிலிருந்து 125 கிமீ தொலைவில் உள்ளது.

ஒடிசா கடற்கரை மாவட்டங்களில் கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பராதீப்பில் 106 கிமீ வேகமுடைய காற்று வீசி வருகிறது. பராதீப்பில் மட்டும் 197.1 மிமீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT