உம்பன் புயல் அச்சுறுத்தும் சூழலில் அந்த சமயத்தில் கட்சி தொண்டர்கள் செய்ய வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா புயல் வீசும் பகுதிகளைச் சேர்ந்த மாநிலங்களின் கட்சி நிர்வாகிகளுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார்.
மேற்குவங்க கடலில் மையம் கொண்டள்ள உம்பன் கடும் சூறாவளிப் புயலானது, கடந்த 6 மணி நேரத்தில், வடக்கு – வடகிழக்கு திசையில், மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காள விரிகுடாவின் மேற்கு மத்தியப் பகுதியில், தெற்கு பாரதீப் (ஒடிசா)வுக்கு 420 கீ.மீ தொலைவிலும், தெற்கு-தென்மேற்கு திகா-வுக்கு (மேற்குவங்கம்) 570 கி.மீ தொலைவிலும் மற்றும் தெற்கு மற்றும் தென்-மேற்கு கேபுபாரா (வங்கதேசம்) 700 கி.மீ தொலைவிலும் இன்று காலை 11.30 மணிக்கு மையம் கொண்டிருந்தது.
இது வங்கக் கடலின் வடமேற்குக்கு குறுக்கே வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம்- வங்கதேசம் கடலோரப் பகுதியில் திகா(மேற்கு வங்கம்) மற்றும் ஹதியா தீவுகள் (வங்கதேசம்) அருகே சுந்தர்பன்ஸ் பகுதியில் நாளை( மே 20ம் தேதி) தீவிர புயலாக மணிக்கு அதிகபட்சம் 165-185 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் எனத் தெரிகிறது.
இந்த புயல் அச்சுறுத்தும் சூழலில் அந்த சமயத்தில் கட்சித் தொண்டர்கள் செய்ய வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மாநிலங்களின் பாஜக நிர்வாகிகளுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார்.
மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மட்டுமின்றி கடலோரா மாநிலங்களின் பாஜக நிர்வாகிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆந்திரா, தமிழகம், கேரள மாநில பாஜக நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தேசியச் செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறித்தும், அதற்கு தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்ய கட்சி நிர்வாகிளும், தொண்டர்களும் தயாராக இருக்க வேண்டும் என ஜே.பி.நட்டா கேட்டுக் கொண்டார்.