கோப்புப் படம் 
இந்தியா

உம்பன் புயல் எதிரொலி: தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாகும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

உம்பன் புயல் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது சற்று தாமதமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தையொட்டிய வங்காள விரிகுடா கடலில் மையம் கொண்டுள்ள உம்பன் கடும் சூறாவளிப் புயலானது, கடந்த 6 மணி நேரத்தில், வடக்கு – வடகிழக்கு திசையில், மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காள விரிகுடாவின் மேற்கு மத்தியப் பகுதியில், தெற்கு பாரதீப் (ஒடிசா)வுக்கு 480 கீ.மீ தொலைவிலும், தெற்கு-தென்மேற்கு திகா-வுக்கு (மேற்குவங்கம்) 630 கி.மீ தொலைவிலும் மற்றும் தெற்கு மற்றும் தென்-மேற்கு கேபுபாரா (வங்கதேசம்) 750 கி.மீ தொலைவிலும் இன்று காலை 8.30 மணிக்கு மையம் கொண்டிருந்தது.

இது வங்கக் கடலின் வடமேற்குக்கு குறுக்கே வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம்-வங்கதேசம் கடலோரப் பகுதியில் திகா(மேற்கு வங்கம்) மற்றும் ஹதியா தீவுகள்(வங்க தேசம்) அருகே சுந்தர்பன்ஸ் பகுதியில் மே 20ம் தேதி மதியம் அல்லது மாலை அதி தீவிர புயலாக மணிக்கு அதிகபட்சம் 165-195 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் எனத் தெரிகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள டோப்ளர் வானிலை ரேடார் மூலம் உம்பன் கடும் சூறாவளிப் புயல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதையடுத்து புயல் காரணமாக மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மிருத்யுஞ்செய் மகாபத்ரா கூறியதாவது:
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக சூறாவளி புயல் ஏற்பட்டுள்ளது. உம்பன் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நாளை மேற்குவங்கம் மற்றும் ஒடிசா கடல் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிருத்யுஞ்செய் மகாபத்ரா

இந்த புயல் காரணமாக வழக்கமான தென்மேற்கு பருவமழை தாமதமாகியுள்ளது. வழக்கமாக கேரளாவில் ஜூன் 1-ம் தேதி மழைத் தொடங்கும். இந்த முறை சற்று தாமதமாக ஜூன் 5-ம் தேதி தான் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT