கோப்புப்படம் 
இந்தியா

அச்சம் வேண்டாம்: இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு 7 பேர் மட்டும்தான் கரோனா நோயாளிகள்; நமக்கு 64 நாள்- உலக நாடுகளுக்கு?

பிடிஐ

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இருப்பினும் உலக அளவிலான பாதிப்போடு ஒப்பிடும்போது மத்திய அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கையால் பாதிப்பு ஏற்பட நீண்டகாலம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைசச்கம் மற்றும் வேர்ல்டோமீட்டர்ஸ் புள்ளிவிவரங்கள் படி, “இந்தியாவில் இன்று கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆயிரத்து 139 ஆக அதிகரித்துள்ளது. இதில் கரோனவிலிருந்து குணமடைந்து சென்றோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர எண்ணிக்கை 58 ஆயிரத்து 302 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 163 ஆக உயர்ந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு 100 என்ற அளவிலிருந்து ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை எட்ட 64 நாட்கள் எடுத்துக்கொண்டது. கரோனாவால் உலகில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் மத்திய அரசு எடுத்த லாக்டவுனால் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் கரோனா நோயாளிகள் 100 என்ற எண்ணிக்கையிலிருந்து ஒரு லட்சத்தை அடைய 25 நாட்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஸ்பெயினுக்கு 30 நாட்கள் தேவைப்பட்டன.

ஜெர்மனி 100 முதல் ஒரு லட்சத்தை எட்ட 35 நாட்களும், இத்தாலி 36 நாட்களும் எடுத்துக்கொண்டன, பிரான்ஸுக்கு 39 நாட்களும், பிரிட்டனுக்கு 42 நாட்களும் தேவைப்பட்டன. ஆனால், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட லாக்டவுன் நடவடிக்கையால் 64 நாட்கள் ஆகியுள்ளன.

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 7 பேர் மட்டும்தான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உலக சராசரியில் இது 60 ஆக இருக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள்படி 42.25 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலக கரோனா பாதிப்பு சராசரி என்பது 60 பேராகும்.

அமெரிக்காவில் 14 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளநிலையில் அங்கு லட்சத்துக்கு 431 பேர் கரோானா நோயாளிகள். பிரிட்டனில் 2.40 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு லட்சத்துக்கு 361 பேர் சராசரியாகப் பாதிக்கப்பட்டனர். ஸ்பெயினில் 2.30 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சராசரியாக லட்சத்துக்கு 494 பேர் மட்டுமே கரோனா நோயாளிகள்.

இத்தாலியில் 2.24 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு 372 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். ஜெர்மனியில் ஒரு லட்சத்துக்கு 210 பேரும், பிரான்ஸில் ஒரு லட்சம் பேருக்கு 209 கரோனா நோயாளிகளும் சராசரியாக உள்ளனர்.

ஆனால், இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 7 பேர் மட்டுமே கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளது உலக அளவில் மிகக்குறைவாகும்.

SCROLL FOR NEXT