தமிழக - ஆந்திர எல்லையான புத்தூரில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரங்களை ஆந்திர காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 30 தொழிலாளர்களையும் கைது செய்தனர்.
கடந்த மே மாதம், திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை ஆந்திர காவல் துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், நேற்று சித்தூர் மாவட்டம் புத்தூர் பைபாஸ் சாலையில் ஆந்திர காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து சென்னைக்கு சென்ற கன்டெய்னர் லாரியை சோதனையிட்டபோது அதில், ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் இருந்தன. செம்மரங் களைக் கைப்பற்றிய காவல் துறையினர், அந்த லாரியில் இருந்த தமிழக தொழிலாளர்கள் 30 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக மேலும் 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட லாரி, கார்கள், செம்மரங்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. கைது செய்யப் பட்ட தொழிலாளர்கள் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந் துள்ளது.