கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக டெல்லி வெளிவராத நிலையில் பொருளாதார நடவடிக்கைக்காக கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவித்திருப்பது டெல்லி மக்களுக்கு டெத் வாரண்ட்டாக அமையலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் கொண்டுவரப்பட்ட ஊரடங்கின் 4-வது முறை தொடர்ந்து வருகிறது. கடந்த 3 கட்டஊரடங்கைப் போல் அல்லாமல், பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகளை மத்தியஅரசு அறிவித்துள்ளது. அதைப்பின்பற்றி ஒவ்வொரு மாநில அரசும் தளர்வுகளை அறிவித்துள்ளனர். இருப்பினும் 4-வது கட்ட லாக்டவுன் வரும் 31-ம் தேதி வரை தொடரும்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்து நேற்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார். இதில் “ டெல்லியில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதித்த டெல்லி அரசு குறைந்த பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதித்துள்ளது. மேலும் ஆட்டோவில் ஒருவரும், இ-ரிக்சாவில் இருவரும், வாடகைக்கார்களில் இரு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதித்துளள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் சலூன்கள் திறக்கவும் அனுமதி்த்துள்ளது
மார்க்கெட்டுகள், சிறு கடைகள் போன்றவற்றையும் திறக்க அனுமதித்த டெல்லி அரசு, விளையாட்டு கூடங்களில் விளையாடவும்,பார்வையாளர்கள் வரவும் தடை செய்துள்ளது. இதுபோன்ற பல்ேவறு காட்டுப்பாடு தளர்வுகளை முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்தார்
முதல்வர் கேஜ்ரிவாலின் கட்டுப்பாடுகளை அதிகமாக தளர்த்தி அறிவித்தமைக்கு பாஜகஎம்.பி. கவுதம் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “ டெல்லியில் ஏறக்குறைய அனைத்துக் கட்டுப்பாடுகளையும் முதல்வர் கேஜ்ரிவால் தளர்த்தியுள்ளார்.
இது டெல்லி மக்களுக்கு டெத் வாரண்ட்டாக அமையும். டெல்லி அரசு மீண்டும், மீண்டும் சிந்தித்து செயல்பட நான் வலியுறுத்துகிறேன். தவறான நடவடிக்கை எடுத்தால், அனைத்தும் முடிந்துவிடும்.
டெல்லியில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும்போது, லாக்டவுனை தளர்த்துவது உடனடியாக இல்லாமல் படிப்படியாகவே இருக்க வேண்டும்” எனத் தெரிவி்த்துள்ளார்