நூறு நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு ஊதியம் தடைபடாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பலனில்லாமல் உள்ளது.
கடந்த ஜூலை 31-ம் தேதி வரை பயனாளிகளுக்கு பல்வேறு மாநிலங்களின் சம்பள நிலுவை தொகை சுமார் ரூ.1,400 கோடியாக உயர்ந்துள்ளது. இது தமிழகத்தில் மட்டும் ரூ.82.98 கோடியாக உள்ளது.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி தொழில் திறனற்ற, வேலைவாய்ப்பில்லாத மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு மாநில அரசுகளால் வேலை தரப்படுகிறது. இதில் தொடக்கம் முதலாகவே, தொழி லாளர்களுக்கு சம்பளம் தாம தமாக கிடைப்பதாகப் புகார் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின்படி, பணி முடிந்து அதிகபட்சம் 15 நாட்களுக்குள் தொழிலாளர்களுக்கு சம்பளம் தரப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2012-13 நிதியாண்டில் 42.4 சதவீதமாக இருந்த சம்பள நிலுவைத் தொகை, 2014-15-ல் 70.84 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்த நிதியாண்டான 2015-16 தொடங்கி வெறும் நான்கு மாதங்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையிலும், சம்பள நிலுவை அதிகரித்த நிலையிலேயே உள்ளது.
கடந்த ஜூலை 31-ம் தேதி வரை மத்திய அரசிடம் உள்ள புள்ளிவிவரத்தின்படி 4 மாதங்களில் ரூ.1419.85 கோடி சம்பளத் தொகை பல்வேறு மாநிலங்கள் சார்பில் நிலுவையில் உள்ளது. இதில் மிக அதிகமாக சமாஜ்வாதி கட்சி ஆளும் உ.பி.யில் ரூ.219.53 கோடியாக உள்ளது. இதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் ரூ.205.49 கோடியும், கேரளத்தில் ரூ.169.64 கோடியும் நிலுவையில் உள்ளன.
இந்த நிலுவைத் தொகை தமிழகத்தில் ரூ.82.98 கோடி, ஆந்திராவில் ரூ.35.21 கோடி, தெலுங்கானாவில் ரூ. 33.82 கோடி, கர்நாடகத்தில் ரூ.22.78 கோடியாக உள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, “இந்த தாமதப் பிரச்சினைகளுக்காக 100 நாள் வேலை திட்டத்தில் சில சட்டத்திருத்தம் கொண்டு வந்தும் பலனில்லை.
நிலுவைத் தொகையை 0.5 சதவீத வட்டியுடன் சேர்த்து தரவேண்டும் என நிர்ணயிக்கப் பட்டாலும் அதை பெரும்பாலான மாநிலங்கள் பின்பற்றுவதில்லை. நிலுவையை தவிர்க்க தொழிலா ளர்களின் வங்கிக் கணக்குகளில் சம்பளத்தை நேரடியாக செலுத்து மாறு கூறிய ஆலோசனையும் செயல் படுத்தப்படாமல் உள்ளது. இணையதள தொடர்பு கிடைப் பதில் சிரமம் உள்ளிட்டவை இதற்கு காரணங்களாக சொல்லப் படுகிறது” என்றனர்.