தேசிய அளவிலான ஊரடங்கால், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.
போக்குவரத்து வசதியின்றி பலரும் சாலைகளில் நடந்தும் லாரி போன்ற சரக்கு வாகனங்களிலும் செல்கின்றனர். இவ்வாறு செல்வோர் விபத்துக்களில் சிக்குவதும் அதிகரித்துள்ளது. இதை தடுக்க உ.பி.யில் பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்துள்ளார்.
இதன்படி உ.பி.யின் 75 மாவட்டஎல்லைகளிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனை, உணவு, குடிநீர், கழிப்பறை போன்றவசதிகளும் மே 15 முதல் செய்யப்பட்டுள்ளன. இங்கு தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இவர்களில் உ.பி.யை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் வரையிலும் வெளிமாநில தொழிலாளர்கள் மாநில எல்லை வரையிலும் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இந்த வசதிகளையும் மீறி உ.பி.யின் ஒரய்யா மற்றும் உன்னாவ் வழியாக இரு தினங்களுக்கு முன் லாரியில் சென்ற தொழிலாளர்கள் வெவ்வேறு விபத்துகளில் சிக்கினர். இதில் ஜார்க்கண்ட், பிஹார்மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 37 பேர் உயிரிழந்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த முதல்வர் யோகி, நெடுஞ்சாலை காவல் நிலையங்களின் 2 ஆய்வாளர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார். எஸ்பி, டிஐஜி, ஐஜி ஆகிய போலீஸ் அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளார்.
மேலும் அதிகாரிகளுக்கு அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், “மாவட்ட எல்லைப் பகுதிகளில் தொழிலாளர்களுக்கான அனைத்து வசதிகளுடன் 200 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை கடந்து தொழிலாளர்கள் எவரேனும் நடந்தோ அல்லது வாகனங்களிலோ சென்றால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே நாடு முழுவதிலும் இருந்து உ.பி. திரும்பும் தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.