இந்தியா

வரும் 31-ம் தேதி வரை தமிழகம், கேரளா உள்ளிட்ட 4 மாநிலத்தவர்கள் நுழைய தடை: கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவு

இரா.வினோத்

கரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை சேர்ந்த மக்கள் வரும் 31-ம்தேதி வரை கர்நாடகாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 4-வது கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் விதிமுறைகளை தளர்த்துவது குறித்து முதல்வர் எடியூரப்பா, மூத்த அமைச்சர்கள் மற்றும்முக்கிய அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் இதுவரை 1,231 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. இருப்பினும் கரோனா வைரஸை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் பணியில்அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்துவரும் மக்களால்தான் கர்நாடகாவில் க‌ரோனா பாதிப்பு அதிகரித்தது. இதை கட்டுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

முதல்கட்டமாக கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள தமிழ் நாடு, மகாராஷ்டிரா, குஜராத்,கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து மக்கள், வரும் 31-ம் தேதி வரை கர்நாடக மாநிலத்துக்குள் நுழைய அனுமதி வழங்கப்படாது. அதே வேளையில் அத்தியாவசிய தேவை, அவசர தேவைக்காக மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

கர்நாடகாவில் சிவப்பு மண்டலம், மக்கள் நடமாட கூடாத பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் அரசு பேருந்துகள் இயக்கப்படும். ஏசிபேருந்துகள், தனியார் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. அதேபோல இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை பேருந்துகள் இயங்காது. தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரு பேருந்தில் 30 பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு 14 நாட்கள் கட்டாயதனிமை உண்டு. கர்நாடகாவில்இருந்து வேறு மாநிலங்களுக்குசெல்பவர்கள் அனுமதிக்கப்படுவர். அதே வேளையில் அவசர தேவைக்காக மட்டும் பயணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் தவிர்த்து பிற கடைகளை செவ்வாய்க்கிழமை முதல் திறக்கலாம்.காலை, மாலை மட்டும் நடைபயிற்சிக்காக பூங்காக்கள் திறக்கப்படும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT