பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு மாதந்தோறும் உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி இந்த மாதம் 31-ம் தேதி இடம்பெறுகிறது. அதற்கான தலைப்பு, ஆலோசனைகளை மக்கள் தெரிவிக்கலாம் என மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘இந்த மாதத்துக்கான மனதின் குரல் நிகழ்ச்சி 31-ம் தேதி இடம்பெறுகிறது. அதற்கான கருத்துகள், ஆலோசனைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். உங்கள் தகவல்களை 1800-11-7800 என்ற எண்ணில் அழைத்து பதிவு செய்யலாம். அல்லது நமோ (NaMo) அல்லது மைகவ் (MyGov) செயலியில் எழுதி அனுப்பலாம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர 1922 என்ற எண்ணை அழைத்து துண்டித்ததும் எஸ்எம்எஸ் வழியாக அனுப்பப்படும் இணைப்பு வழியாகவும் ஆலோசனைகளை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாக உள்ள இந்த மாதம் 31-ம்தேதியில் கரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள 4-ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.
கடந்த 17-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்த ஊரடங்கை, 4-வது கட்டமாக மே 31-ம் தேதி வரை என மேலும் 2 வாரங்களுக்கு. மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டது. பிரதமர் மோடியின் முந்தைய மனதின் குரல் நிகழ்ச்சி, கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி ஒலிபரப்பானது குறிப்பிடத்தக்கது.