வங்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மீட்புப்பணிகள் குறித்து ஆலோசிக்க உள்துறை அமைச்சகம், பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
வங்ககடலின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் மேலும் வலுவடைந்து, உம்பன் புயலாக மாறி, வங்கக்கடலின் தென்கிழக்காக நகர்ந்து, வடக்கு, வடமேற்காக அதி தீவிரப்புயலாக மாறி மேற்கு வங்கம், வங்க தேச கடற்கரையில் இன்று இரவு அல்லது நாளை காலை கடற்கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையி்ல் உம்பன் புயலை எதிர்கொள்ள மத்திய அரசு, பேரிடர் மீட்பு துறை உள்ளிட்டவை எவ்வாறு தயாராக இருக்கிறார்கள் என்பது குறித்து உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று மாலை 4மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பேரிடர் மேம்பாட்டு ஆணையத்தின் உயர் அதிகாரிகள், உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்
இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் “ நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்த இருக்கும் உம்பன் புயல் குறித்து இன்று மாலை 4 மணிக்கு பிரதமர்மோடி தலைமையில் உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் முக்கிய அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்” எனத் தெரிவித்தார்
வங்கக்கடலில் உருவான உம்பன் புயல் மேலும் தீவிரமடைந்து சூப்பர் புயலாக மாறி இன்று மாலை மேற்குவங்கக் கடற்கரை, வங்கதேச கடற்கரையைத் தாக்கும். அப்போது மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலைமையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உம்பன் புயல் தொடர்பாக மேற்குவங்கம், ஒடிசா அரசுகளுக்கு முன்னெச்சரிக்கை செய்யப்பட்டு அங்கு பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 13 கிமீவேகத்தில் வடக்கு நோக்கி உம் பன் புயல் நகர்ந்து வருகிறது.
இந்த உம்பன் புயல் மேற்கு வங்கம், வங்கதேசமத்தில் திஹா-ஹதியா தீவுகளில் 20ம் தேதி மாலை அல்லது இரவு சூப்பர் புயலாக மாறி கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது