பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

கரோனா தாக்கம்: வெளிநாடுகளின் ஒரு வருட முதுநிலைப்பட்டப் படிப்பை அங்கீகரிக்க மத்திய அரசு திட்டம்

ஆர்.ஷபிமுன்னா

வெளிநாடுகளின் ஒரு வருட முதுநிலைப் பட்டத்திற்கானப் படிப்பை இந்தியாவில் அங்கீகரிக்க மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை திட்டமிடுகிறது. இது சர்வதேச அளவில் கரோனா வைரஸ் பரவலின் விளைவாகவும் கருதப்படுகிறது.

இந்தியாவில் பொறியியல் மற்றும் மருத்துவத்தில் இளநிலைப் பட்டம் முடித்தவர்கள் வெளிநாடு செல்வது அதிகம். இவர்கள் அங்குள்ள கல்வி நிறுவனங்களில் ’எம்.எஸ்’ எனும் முதுநிலைப் பட்டம் பெறச் செல்கின்றனர்.

பல லட்ச ரூபாய் செலவாகும் இக்கல்விக்கானக் கட்டணத்திற்கு உதவித்தொகையும் கிடைக்கிறது. இது, பள்ளி மற்றும் முதுநிலைப்பட்ட இறுதிதேர்வுகளின் மதிப்பெண்களை பொறுத்து அளிக்கப்படுகிறது.

முதுநிலைக்கல்வி பெறச் செல்லும் நாடுகளின் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மாணவர்களுக்கான ஆங்கிலத் திறனாய்வு தேர்வையும் நடத்துகின்றனர். இதில் மாணவர் எடுக்கும் மதிப்பெண்களும் உதவித்தொகை அளிக்க பரிசீலிக்கப்படுகிறது. .

இதனால், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் முற்றிலும் கல்விக்கட்டணம் இல்லாமல் பயிலும் வாய்ப்புகளும் உள்ளன. இதை முடித்தவர்களில் பலரும் அதே நாடுகளின் வேலைகளில் அமர்ந்து விடுகின்றனர்.

இவர்களுக்கு இந்தியாவின் அரசு மற்றும் தனியார் பெருநிறுவனங்களின் வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் கிடைக்கிறது. இதுபோன்ற எம்.எஸ் முதுநிலைப் பட்டம், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் ஒரு வருடத்திற்கானதாகவும் உள்ளது.

இதன் கல்விக்கட்டணம் அதிகம் அதற்கு உதவித்தொகை கிடைப்பதும் குறைவு. இரண்டு வருடங்களுக்கானப் பாடங்களை விட ஒரு வருடத்தில் சற்று குறைவாகவே இடம் பெறும்.

இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த ஒரு வருட எம்.எஸ் படிப்பை இந்தியா அங்கீகரிப்பதில்லை. இந்தியாவில் வேலைவாய்ப்பிலும் ஒரு வருட எம்.எஸ் கல்வியை கணக்கில் எடுப்பதில்லை.

எனினும், 2 வருடத்தை போல் ஒரு வருட எம்.எஸ் முடிப்பவர்களுக்கு வெளிநாடுகளிலேயே வேலைவாய்ப்புகள் கிடைப்பது உண்டு. தொடர்ந்து முனைவர் ஆய்விற்கானப் பட்டம் பெற இந்த ஒரு வருட முதுநிலைக்கல்வி பயன்தருகிறது.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலால் வெளிநாடுகளில் தங்கி கல்விப்பயிலச் சென்று மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால், அவர்கள் அடுத்த கல்வியாண்டிற்கு விண்ணப்பிக்கும் எண்ணிக்கை தற்போது சுமார் 45 சதவிகிதம் குறைந்துள்ளது.

இதை சமாளிக்க ஒர் வருட எம்.எஸ் கல்வியையும் அங்கீகரிக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. ஒருவருட எம்.எஸ் பயின்றவர்களின் வேலைவாய்ப்பிற்கான தடையையும் மத்திய அரசு இந்தியாவில் விலக்கும் எனத் தெரிகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சக வட்டாரம் கூறும்போது,’கரோனா காரணமாக வெளிநாடுகளில் கல்வி பெறுவது குறையும் சூழல் உருவாகி உள்ளது.

இதை சமாளிக்க ஒரு வருட எம்.எஸ் முதுநிலை கல்வியை அங்கீகரிக்கலாம் என எங்கள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு, 2 வருட பட்டமேற்படிப்புகளை வழங்கும் இந்தியாவின் அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு இழைக்கும் அநீதி.

இது இந்தியாவில் 2 வருட முதுநிலைப் பட்டம் பெற்றவர்களின் வாய்ப்பை பறிப்பதாக அமையும். இதை நன்கு அறிந்தும் வெளிநாடுகளின் வற்புறுத்தலுக்கு வேண்டி இதை செய்ய வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்தனர்.

ஒரு வருட எம்.எஸ் முதிநிலை பட்டத்தை அங்கிகரிக்கக் கோரி பல வருடங்களாக வெளிநாடுகளின் தனியார் கல்விநிலையங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.

இவர்களுக்காக இந்தியாவில் உள்ள ஏஜெண்டுகளும் இதை வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கை மீது மத்திய பல்கலைகழக மானியக்குழுவிடம்(யூஜிசி) கருத்து கேட்கப்பட்டிருந்தது. இதற்கு யூஜிசியும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT