கரோனா வைரஸால் ஏற்பட்ட லாக்டவுனால் பிஹாரில் உயிரிழந்த தனது மகனின் இறுதிச்சடங்கைக் கூட பார்க்க முடியாத நிலைக்கு புலம்ெபயர்தொழிலாளர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்களின் வேதனையைச் சொல்லும் விதமாக அந்த தொழிலாளி அழும் புகைப்படம் வைரலாகி வருகிறது
இந்த புகைப்படத்தை பிடிஐ செய்தி நிறுவனத்தின் புகைப்ப்பட நிருபர் அனில்யாதவ் எடுத்துள்ளார்.
பிஹார் மாநிலம், பெகுசாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பூகார் பண்டிட்(வயது38). இவருக்கு திருமணமாகி 3 பெண் மகளும் ஒரு மகனும் உள்ளனர். இதில் கடந்த ஆண்டுதான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறு வயதிலேய புலம்பெயர்ந்து டெல்லியில் கட்டிடத் தொழிலாளியாக ராம்புகார் பணிபுரி்ந்து வருகிறார்.
தற்போது டெல்லியில் ஒரு திரையரங்கம் கட்டும் பணியில் ராம்புகார் பண்டிட் ஈடுபட்டு இருந்தபோது, லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. சொந்த ஊருக்குச்செல்ல முடியாமல் ஒரு மாதமாகத் தவித்த ராம்புகார் பண்டிட் கையில் பணமில்லாததால் வேறு வழியின்றி 1,200 கி.மீ தொலைவை நடந்து கடக்கத் தொடங்கினார்.
ஆனால், அதற்கும் போலீஸார் அனுமதிக்காததால் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பாலத்திலேயே 3 நாட்களாக தங்கியுள்ளார். அவரால் வேறு எங்கும் செல்ல முடியவில்லை, செல்வதற்கு கையில் பணமும் இல்லை.
கடந்த சில நாட்களுக்குமுன் அவருக்கு வந்த செல்போன் அழைப்பில் அவரின் ஒரு வயது மகன் இறந்துவிட்டான் எனக் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலைக் கேட்டு கதறித்துடித்த ராம்புகார் பண்டிட் லாக்டவுனால் சொந்த ஊர் செல்லமுடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்
இந்த காட்சியைப் பார்த்த பிடிஐ புகைப்பட நிருபர், ராம்புகார் பண்டிட் அழும் காட்சியைப் புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படம்தான் அது புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையை எடுத்துக்கூறும் மூலப்படிவப் புகைப்படமாக மாறி வைரலாகியுள்ளது.
ராம்புகார் பண்டிட் அழும் காட்சியைப் பார்த்த ஒரு பத்திரிகையாளர், மற்றொரு பணக்கார பெண்ணின் உதவி பெற்று ரூ,5500 செலுத்தி பிஹாருக்கு சிறப்பு ரயிலி்ல் அனுப்பியுள்ளார். தற்போது பெகுசாரியில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் ஒரு பள்ளிக்கூடத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான முகாமில் ராம்புகார் பண்டிட் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளி ராம்புகார் பண்டிட் பிடிஐ செய்து நிறுவனத்துக்கு தொலைப்பேசி மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாங்கெல்லாம் தொழிலாளர்கள். தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு வாழ்க்கை இல்லை. வாழ்க்கை முழுவதும் வறுமை சக்கரத்தில் சிக்கி, சுழன்று இறந்துவிட வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்குச்செல்ல முடியாத விரக்தியில் டெல்லி நிஜாமுதீன் பாலத்தில் தங்கிருந்தேன். ஒரு வயதுகூட நிரம்பாத எனது மகன்இறந்துவிட்ட செய்தி எனக்கு செல்போன் மூலம் கிடைத்தவுடன் நான் குடும்பத்தினரை காணச் செல்லத் துடித்தேன். ஆனால் எனக்கு உதவ யாரும் இல்லாததால் கண்ணீர் விட்டு அழுதேன்.
என்னை சொந்த ஊருக்குஅனுப்பி வையுங்கள் போலீஸாரிடம் சென்று மன்றாடினேன். ஆனால் உதவி கிடைக்கவில்லை. ஒரு காவலர், என்னிடம் நீ சொந்த ஊருக்கு சென்றால்கூட உயிரிழந்த உன் மகன் உயிர்பிழைத்து வந்துவிடுவானா. இது லாக்டவுன். நீ எங்கும் செல்ல முடியாது எனத் தெரிவித்தார்
அப்போது அந்த வழியாகச் சென்ற ஒரு பத்திரிகையாளர் நான் அழுவதைப் பார்த்து ஏன் அழுகிறார் எனக் கேட்டார். நான் நடந்த சம்பவங்களைக் கூறியபின் என்னை அவர் காரில் அழைத்துச் செல்ல முயன்றார். ஆனால், அதற்குகூட போலீஸார் அனுமதி்க்கவில்லை. அந்த பத்திரிகையாளர் யாரிடமோ பேசி எனக்கு உணவு, ரூ.5500 பணம் கொடுத்து சிறப்பு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து என்னை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
பணக்காரர்களுக்கு அனைத்து உதவியும் கிடைக்கும், அவர்களைக் காப்பாற்ற வருவார்கள், வெளிநாடுகளி்ல இருந்தால் விமானத்தில் கூட அழைத்துவருவார்கள். ஆனால் ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுவார்கள். இதுதான் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கான மதிப்பு. நாங்கள் தொழிலாளர்கள் எந்த நாட்டையும் சேராதவர்கள்
என் மகனுக்கு ஆசையாக என் பெயரையும் சேர்த்து ராம்பிரகாஷ் என்று பெயர் வைத்தேன். ஆனால், மகனின் இறுதிச்சடங்கிற்கு எந்த அப்பாவாவது போகாமல் இருக்க முடியுமா, குடும்பத்தாருடன் துக்கத்தை பகிரமாட்டாரா.
நான் பெகுசாரி கிராமத்துக்கு நான் இரு நாட்களுக்கு முன்புதான் வந்து சேர்ந்தேன். தற்போது பெகுசாரி நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தனிமை முகாமில் இருக்கிறேன் எப்போது எனது குடும்பத்தினரைச் சந்திப்பேன் என எனக்குத் தெரியாது.
எனது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், எனது மகள்கள் எனக்காக காத்திருக்கிறார்கள். இந்த காத்திருப்பு முடிவதுபோல் தெரியவில்லை”
இவ்வாறு ராம்புகார் பண்டிட் தெரிவித்தார்