கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தால் நாட்டில் உள்ள 89 சதவீத மக்களுக்கு வாராந்திர வருமானம் இல்லாமல்போய்விட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மத்தியஅரசைச் சாடியுள்ளார்
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஏற்பட்ட பொருளாதார முடக்கத்திலிருந்து மீள்வதற்கு ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நேரடியாகப் பணத்தை மத்தியஅரசு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தால் நாட்டில் 89 சதவீத மக்களின் வாராந்திர வருவாய் பூஜ்ஜியமாக இருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவை நடத்தியஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களுக்கு செல்லும் போது வேலை கிைடத்தது. இப்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்பும்போது, அவர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கவலைக்குரியதாக மாறியிருக்கிறது.
நகரங்களில் இன்னும் தங்கியிருந்தால் உணவுக்குகூட வழியிருக்காது என்பதால், நாங்கள் சொந்த ஊர்களுக்குச்செல்கிறோம் என சாலையில் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் மிகுந்த வேதனையும் தெரிவி்க்கிறார்கள்.
ஏழை மக்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் நேரடியாக பணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற எனது கருத்தை தொழிலதிபர்கள் அசிம் பிரேம்ஜி, வேணு ஸ்ரீனிவாசன் இருவரும் ஆதரிக்கின்றனர். அவர்கள் கூறிய கருத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு ஏழைகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்சம் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்
முன்னதாக ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் “லாக்டவுனில் 52 நாட்கள் கடந்துவிட்டது. கரோனாவுக்கு எதிராக ஒருபுறம் தேசம் போராடுகிறது, மற்றொருபுறம் நமது விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறுகடை உரிமையாளர்கள், மாதஊதியப்பிரிவினர், சிறு,குறுந்தொழில்கள் போன்றவை எப்போதும் சந்திக்காத பொருளாதாரச்சிக்கலைச் சந்திக்கிறார்கள்.
13 கோடி ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 மத்தியஅரசு வழங்கிட வேண்டும். மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கினால்கூட 13 கோடி குடும்பத்துக்கு ரூ.65 ஆயிரம் கோடிதான் அரசுக்கு செலவாகும்” எனத் தெரிவித்தார்