இந்தியா

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் ‘டிவி’க்கு ரூ.2.76 கோடி அபராதம்

செய்திப்பிரிவு

மும்பையைச் சேர்ந்தவரும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகருமான ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு பிரிட்டனின் ஊடக கண்காணிப்பு ஒழுங்கு முறை அமைப்பான ‘ஆப்காம்’, 3 லட்சம் பவுண்ட் அபராதம் விதித்துள்ளது.

ஆங்கிலம், வங்காளம், உருது மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் ‘பீஸ் (அமைதி) தொலைக்காட்சி’ (Peace TV) துபாயில் இருந்து ஒளிபரப்பு செய்துவருகிறது. இதன் நிறுவனர் மற்றும்தலைவராக இருப்பவர் ஜாகிர் நாயக். பீஸ் டிவி நிறுவனம் பிரிட்டனில் வெறுப்புணர்வைத் தூண்டும் நிகழ்ச்சிகளையும் மக்கள் மனதை புண்படுத்தும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனால் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள ஆப்காம் அமைப்பு, தாம் வகுத்துள்ள ஒளிபரப்பு விதிகளை மீறியதாக பீஸ் டிவி (உருது) ஒளிபரப்பு நிறுவனத்துக்கு 2 லட்சம் பவுண்ட், பீஸ் டிவி நிறுவனத்துக்கு ஒரு லட்சம் பவுண்ட் அபராதம் (ரூ.2 கோடியே 75 லட்சத்து 51,773) விதித்துள்ளது. தற்போது மலேசியாவில் தங்கியுள்ள ஜாகிர் நாயக்கை, தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT