கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 3-ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று முடிவடைகிறது. இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கரோனா வைரஸால் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்து 927 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 109 ஆகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் 120 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்தமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 3-ம் கட்டமாக அமல்படுத்தப் பட்ட ஊரடங்கு இன்று முடிவடைகிறது.
இந்நிலையில் மணிப்பூர், பஞ்சாப், தமிழகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் லாக்டவுனை 31-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்தன. இந்த சூழலில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மோடி, அமித் ஷா ஆலோசனை
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், 4-ம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனக் கூறியிருந்தார். மேலும் இது தொடர்பான விதிமுறைகள் 18-ம் தேதிக்கு முன்பு வெளியிடப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், 4-ம் கட்ட ஊரடங்குக்கான விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது துறை உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். குறிப்பாக நேற்று முன் தினம், உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சுமார் 5 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். நேற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளுடன் அமித் ஷா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியானது.
மேலும் ஊரடங்கு விதிகளைத் தளர்த்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதன்படி ஆலோசனைகளை மாநில அரசுகள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளன. இதைப் பரிசீலித்து புதிய விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று இதுதொடர்பான நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட நெறிமுறைகள்
* பேருந்து சேவைகளை அனுமதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பேருந்து செல்ல நிபந்தனையுடன் அனுமதிக்கலாம்
* திரையரங்குகள், வணிக வளாகங்கள், மெட்ரோ ரயில் சேவை, விமானச் சேவைக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.
* மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்திற்கு தடை ஏதும் இல்லை.
* வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதம் சார்ந்த இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூட தடை நீட்டிப்பு
* முடிதிருத்தும் கடைகள் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். சிவப்பு மண்டலங்களிலும் சலூன்களைத் திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம்
* திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்கலாம். தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* அனுமதிக்கப்பட்ட கடைகளில் 5 நபர்களுக்கு மேல் கூடத் தடை நீட்டிக்கப்படுகிறது. தனிமனித இடைவெளி அவசியம்.
* நீச்சல் குளங்கள், பூங்காக்கள், மதுபானக் கூடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது.
* உணவகங்களில் அமர்ந்து சாப்பிடத் தடை நீட்டிக்கப்படுகிறது. டோர் டெலிவரி செய்ய அனுமதி உண்டு.
* பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
* நிறுவனங்கள் இயன்ற அளவு பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.
* பொது இடங்கள், பணியிடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். எச்சில் துப்பக்கூடாது
* அத்தியாவசிய தேவை தவிர இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது.
* கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்.
* பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.