இந்தியா

எதிர்க்கட்சிகளின் அர்த்தமற்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு திட்டவட்டம்

பிடிஐ

எதிர்க்கட்சிகளின் அர்த்தமற்ற கோரிக்கைகளை அரசு ஏற்காது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

லலித் மோடி மற்றும் வியாபம் விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது. அர்த்தமற்ற இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது. சுஷ்மா ஸ்வராஜ் நமது நாட்டுக்கு கிடைத்துள்ள சொத்து. வசுந்தரா, சிவராஜ் ஆகியோர் சிறந்த செயல் வீரர்கள். அவர்கள் மீது ஊழல் புகார் எதுவும் இல்லை. இருப்பினும் அவர்களை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்துகிறது காங்கிரஸ்.

நரேந்திர மோடி தலைமையி லான மத்திய அரசின் சாதனைகளைக் கண்டு அலறு கிறது காங்கிரஸ். எனவேதான் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்து நாட்டின் முன் னேற்றத்துக்கு தடையை ஏற் படுத்துகிறது.

முந்தைய ஐக்கிய முற்போக் குக் கூட்டணி ஆட்சியின்போது 6 அமைச்சர்கள் ராஜினாமா செய்ததற்கு அவர்கள் மீதான ஊழல் புகார்தான் காரணம். இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டதும் உண்மை. இதை முன்வைத்து காங்கிரஸ் வைக்கும் வாதம் நகைப்புக்குரியதாகும்.

தன் மீதான குற்றச்சாட்டு குறித்த எந்தக் கேள்விக்கும் நாடாளு மன்றத்தில் பதில் அளிக்கத் தயார் என்று சுஷ்மா தெரிவித்திருக்கிறார். ஆனால் விவாதம் நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை.மாறாக நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறது. மக்களவையில் குந்தகம் ஏற்படுத்திய காங்கிரஸ் எம்பிக்களை இடைநீக்கம் செய்து மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் எடுத்த நடவடிக்கையில் தவறு இல்லை. இதற்கு முன்பு 1989-ல் 63 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 2013-லும் இதுபோல் நடந்தது.

வெள்ளம், விவசாயிகள் தற்கொலை, லிபியாவில் கடத்தல் போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் முக்கியமான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் நாடாளுமன்றத் துக்கு உள்ளேயும் வெளியேயும் ஆர்ப்பாட்டம் நடத்துவது எதற்கும் உதவாது.

காங்கிரஸ் பரப்பும் பொய் பிரசாரத்தை முறியடிப்பது அவசியம். இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT