கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் வரும் மே 31-ம் தேதிவரை பஞ்சாப் மாநிலத்தில் நீ்ட்டிக்கப்படுகிறது, சிவப்பு மண்டல்தில் கட்டுப்பாடுகள் தொடரும், மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு செயல்படுத்தப்படும் என முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்தார்
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கை மத்திய அரசு கொண்டுவந்தது. இதுவரை 3 கட்ட ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது, 3-வது கட்ட ஊரடங்கு 17-ம்தேதி(இன்று) முடிகிறது. 4-வது கட்ட லாக்டவுனும் தொடரும் என சூசகமாகத் தெரிவித்த பிரதமர் மோடி, ஆனால் வித்தியாசமாக இருக்கும் என அறிவித்திருந்தார்
இதற்கிடையே லாக்டவுன் வரும் 31-ம் தேதி வரை தொடரும் என ஏற்கெனவே மணிப்பூர் மாநிலம் அறிவி்த்த நிலையில், பஞ்சாப் முதல்வர்அமரிந்தர் சிங்கும் 31-ம் தேதிவரை லாக்டவுனை மாநிலத்தில் செயல்படுத்த நேற்று உத்தரவிட்டார்
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சி்ங் காணொலி மூலம் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
பஞ்சாப் மாநிலத்தில் 4-வதுகட்ட லாக்டவுன் வரும் 18-ம் தேதிமுதல் 31-ம் தேதிவரை தொடரும். ஆனால், மாநிலத்தில் எந்த 144 தடை உத்தரவும் இல்லை. கரோனா வைரஸ் பாதித்த சிவப்பு மண்டலங்கள், தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களி்ல் மட்டும்தான் கட்டுப்பாடுகள் தீவிரமாக இருக்கும்.
பஸ்போக்குவரத்து குறைந்த பயணிகளுடன், கரோனா பாதிப்பு குறைந்து பகுதிகளில் படிப்படியாக இயக்கப்படும்.18-ம் தேதி முதல் அதிகமான தளர்வுகளை மாநில அரசு அறிவிக்க உள்ளதால், அதைப் புரி்ந்துகொண்டு சமூக விலகலைக் கடைபிடித்து மக்கள் நடக்க வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் முற்றிலும் சீல் வைக்கப்படும், அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் மட்டுமே திறக்கப்படும். வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தும் திங்கள்கிழமை விரிவாக மாநிலஅரசு அறிவிக்கும்.
அதேசமயம், பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். இந்த ஆண்டு எந்த தனியார் பள்ளியிலும் கட்டணம் உயர்த்தப்படாது. லாக்டவுன் வரும் 31-ம் தேதி தொடர வேண்டும், ஆனால் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பஞ்சாப் அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக கரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால், நானேட் நகரிலிருந்து யாத்ரீகர்கள் வருகை, கோட்டா நகரிலிருந்த மாணவர்கள் வருகைக்குப்பின் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு அளித்ததால் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தமுடிந்தது. இப்போது மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கரோனா பாதிப்பு இரட்டிப்பாக வளர பஞ்சாப் மாநிலத்தில் 44 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.
வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பஞ்சாப் மாநிலத்துக்கு திரும்ப பஞ்சாப் மக்கள் 80 ஆயிரம்பேர் பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் வருைகக்குப்பின் கரோனா பாதி்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அனைவரும் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படுவார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல கட்டணத்தை அரசே செலுத்தும். நாள்தோறும் 18 ரயில்கள் பஞ்சாப்பிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களுடன் புறப்பட்டுச் செல்கின்றன. எந்த தொழிலாளியும் பட்டிணியோடு இருக்க அரசு சம்மதிக்காது, இதுவரை ஒரு கோடி உணவுப் பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன
இவ்வாறு அமரிந்தர் சிங் தெரிவித்தார்