லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு மிக நீண்டகாலமாக நடந்து வருவதால் அதனை ஏப்ரல் 20-ம் தேதிக்குள் முடித்து வைக்குமாறு, லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீதிமன்றங்கள் மூடப்பட்டதால் குறிப்பிட்ட தேதிக்குள் இவ்வழக்கை முடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடித்து வைக்க உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பான விசாரணையை காணொலி காட்சி மூலம் நடத்துவது என முடிவு செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை வரும் 18-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.