கரோனா வைரஸ் அனைத்துலக மக்கள் பெருந்தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்க பிரதமர் நரேந்திர மோடி ரூ.20 லட்சம் கோடி (266 பில்லியன் டாலர்கள்) நிவாரண உதவிகளை அறிவித்தார். இது கூடுதல் பட்ஜெட் செலவினமாக இல்லாமல் பெரும்பாலும் கடன் உத்தரவாத திட்டமாகவும் அல்லது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சுமக்கும் புதிய நிதி உருவாக்கங்களுமாகவே உள்ளன என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 3 நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புலம்பெயர் தொழிலாளர்கள், ஊரக தொழிலாளர்கள், வேளாண் துறை ஆகியவற்றுக்கு நிவாரணங்களை அறிவித்து வருகிறார். இதில் மிகப்பெரிய தொகையாகக் கருதப்படுவது வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியான 13 பில்லியன் டாலர்கள் தொகையாகும். இதற்கு நாபார்ட் வங்கி பொறுப்பு, அரசிடமிருந்து கூடுதல் செலவினம் ஒதுக்கப்படவில்லை.
வெள்ளிக்கிழமையன்று நிர்மலா சீதாராமன் அறிவித்த அனைத்துக்கும் அரசு மொத்தமே ரூ.1000-2000 கோடிதான் செலவு செய்யும், என்று பெயர் கூறவிரும்பாத அரசு அதிகாரிகள் சிலர் ஊடகங்களிடமும் செய்தி நிறுவனங்களிடமும் தெரிவித்தனர்.
கடந்த 3 நாட்களாக அறிவிக்கப்பட்ட நிவாரணத்துக்கான செலவு மொத்தமாக 12.13 பில்லியன் டாலர்கள் என்று தெரிவித்த இன்னொரு அதிகாரி. அரசு ஏன் தன் நேரடிச் செலவுகளைச் செய்யத் தயங்குகிறது எனில் ரேட்டிங்கில் கீழிறங்கி விடும் என்பதற்காகவே என்று இதே அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ. கோபக்குமார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவிக்கும் போது “இந்த நிவாரண அறிவிப்புகளினால் உடனடியாக பெரிய பயன்கள் இல்லை. பங்குச்சந்தைகளில் இந்த அறிவிப்பினால் சிறிதுதான் தாக்கமிருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் மத்திய ரிசர்வ் வங்கி இந்த ஒட்டுமொத்த பொருளாதார நிவாரண பேக்கேஜில் 8 ட்ரில்லியன் ரூபாய்களுக்கான நடைமுறைகளை கையில் எடுத்துக் கொண்டுள்ளது, ஆகவே அரசு நேரடியாக செலவு செய்வது குறைவுதான் என்று இவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே மத்திய அரசின் பொருளாதார மீட்சிக்கான இத்தகைய திட்டங்களை அறிவிப்புகள் என்று விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.