ரெம்டெசிவைர் என்ற மருந்து தற்போது கரோனா வைரசுக்கு கொடுக்கப்படலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் அனுமதியளித்ததையடுத்து இந்தியாவிலும் அதன் உற்பத்திக்காக ஜிலீட் சில நிறுவனங்களுக்கு உரிமம் அளித்துள்ளது, இந்நிலையில் ஜிலீட் நிறுவனத்துக்கு ரெம்டெசிவைர் மருந்துக்கு அளித்த காப்புரிமையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று இரண்டு சுகாதார ஆர்வலர்கள் குழுக்கள் வலியுறுத்தியுள்ளது.
ரெம்டெசிவைர் மருந்துகளுக்கான காப்புரிமைக்காக ஜிலீட் நிறுவனம் 2015-ல் விண்ணப்பித்தது, இந்தியா பிப்ரவரி 18, 2020-ல் காப்புரிமை வழங்கியது.
காப்புரிமையை ரத்து செய்தால்தான் உலகம் முழுதும் கரோனா நோயாளிகளுக்கும் குறிப்பாக ஏழைநாடுகளின் கரோனா நோயாளிகளுக்கும் பகிர்ந்தளிக்க சவுகரியமாக இருக்கும் என்று இவர்கள் இந்திய அரசுக்கு எழுதியுள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தானில் ஜெனரிக் மருந்து உற்பத்திக்கான 5 நிறுவனங்களுடன் உரிம ஒப்பந்தம் செய்து கொண்டது ஜிலீட். இதன் மூலம் இந்த நிறுவனங்கள் 127 நாடுகளுக்கு ரெம்டெசிவைர் விற்க முடியும்.
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் லாபநோக்கில் செயல்படும், அவர்களுக்கு லாபம் பெரிய அளவில் இருக்காது என்பதால் மலிவு விலையில் இந்த மருந்து ஏழை கரோனா நோயாளிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில் இரண்டு சுகாதார ஆர்வலர்கள் குழுக்கள் மத்திய அரசுக்கு எழுதிய கடித்தில், “உரிமங்கள் உலகச் சந்தையை 2ஆக பிரித்துள்ளது. லாபம் தரும் சந்தைகளை ஜிலீட் நிறுவனம் தன் கைவசம் வைத்துள்ளது. அவ்வளவாக லாபம் இல்லாத சந்தைகளை இந்த 5 ஜெனரிக் மருந்து நிறுவனங்களுக்கும் அளித்துள்ளது” என்று மூன்றாம் உலக நெட்வொர்க் என்ற தேர்ட் வேர்ல்ட் நெட்வொர்க் அமைப்பின் மூத்த சட்ட ஆய்வாளர் கோபக்குமார் தெரிவித்துள்ளார்.
இது மலேசியாவில் செயல்படும் லாபநோக்கற்ற குழுவாகும், இதே போல் இந்திய புற்றுநோயாளிகள் உதவி அமைப்பு ஒன்றும் மத்திய அரசுக்கு காப்புரிமையை ரத்து செய்யக் கோரியுள்ளனர்.
டாக்டர்ஸ் விதவுட் பார்டர்ஸ் (எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு) என்ற உதவிக்குழுவும் ஜிலீட் நிறுவனத்தின் ரெம்டெசிவைர் காப்புரிமையை எதிர்த்துள்ளது. உலக அளவில் மருத்துவ நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இது போன்ற காப்புரிமையுடன் கூடிய உரிம அளிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்கின்றனர்.
இந்தியாவில் ரெம்டெசிவைர் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஜிலீட் நிறுவனத்துக்கு 2035-ம் ஆண்டு வரை காப்புரிமை அளிக்கப்பட்டுள்ளது, இது அதிகபட்சக் காலக்கட்டமாகும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக மத்திய வர்த்தக மற்றும் சுகாதார அமைச்சகங்களுக்கு ராய்ட்டர்ஸ் செய்தி ஏஜென்சி மேற்கொண்ட மின்னஞ்சல்களுக்கு இதுவரை பதிலில்லை.
இந்திய புற்று நோயாளிகள் அமைப்பு சட்ட நடவடிக்கையையும் பரிசீலித்து வருகிறது. ”அனைத்துலக மக்கள் தொற்றாக கரோனா வைரஸ் மாறிவிட்ட காலத்தில் ஒரே நிறுவனத்துக்கு ஒட்டுமொத்த காப்புரிமையும் வழங்கப்படலாகாது. நிறைய நிறுவனங்கள் உற்பத்தி செய்தால்தான் மருந்துகள் வாங்கக்கூடிய விலைகளில் அனைத்து தரப்பு நோயாளிகளுக்கும் கிடைக்கும்” என்று கூறியுள்ளது.
அதாவது கரோன சரியாகப் போகிறதோ இல்லையோ 2035 வரை இந்தியாவில் ஜிலீட் நிறுவனத்தின் ரெம்டெசிவைர் காப்புரிமை போகாது என்று தெரிகிறது.
-ராய்ட்டர்ஸ் தகவல்களுடன்... இரா.முத்துக்குமார்