மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு 200 நாட்களுக்கான சம்பளத்தை மத்திய அரசு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வரிசையாக பல்வேறு பிரிவினரும் பலன் பெறும் வகையில் பொருளாதார மீட்பு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.
விவசாயம், பால்பொருள் மற்றும் மீன்வளம் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து நேற்று அவர் அறிவித்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இதுகுறித்து கூறியதாவது
‘‘கரோனா பாதிப்பால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். பணமில்லாமல் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழலில் உள்ளனர். எனவே பிரதமர் மோடி அறிவித்துள்ள திட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு 200 நாட்களுக்காக பணத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இது அவர்களின் தேவைக்கு பயன்படும்’’ எனக் கூறியுள்ளார்.