ரஃபேல் போர் விமானம்: கோப்புப்படம் 
இந்தியா

11 வாரங்கள் தாமதம்: முதல் கட்டமாக 4 ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை இறுதியில் இந்தியா வரவாய்ப்பு

பிடிஐ

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு வாங்கிய ரஃபேல் போர் விமானங்களில், முதல் கட்டமாக 4 விமானங்கள் மட்டும் ஜூலை மாத இறுதியில் இந்தியா வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே மாதம் இறுதியில் ரஃபேல் போர் விமானங்கள் வரும் என முன்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பொதுமுடக்கம் காரணமாக 11 வாரங்கள் தாமதமாக இந்தியாவுக்கு வருகின்றன.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ரஃபேல் போர் விமானம் அதிநவீனத்துடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆயுதம் தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானிலிருந்தே இலக்கை குறிவைத்து தாக்குதல், ஏவுகணை இடைமறித்து தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் ரஃபேல் விமானத்தில் உள்ளன.

ரஃபேல் விமானக் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி அதனை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இல்லை என வழக்கைத் தள்ளுபடி செய்தது.

ஏற்கெனவே செய்த ஒப்பந்தத்தின் படி முதல் கட்டமாக 4 விமானங்களை இந்த மாத இறுதியில் இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக இருநாடுகளிலும் ஏற்பட்டுள்ள முடக்கம் போர் விமானங்களை ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விமானங்களை ஒப்படைப்பதில் 11 வாரங்கள் தாமதமாகியுள்ளன.

ரஃபேல் விமானங்களை இயக்குவதற்காக 7 இந்திய விமானிகள் அடங்கிய முதல் குழு ஏற்கெனவே பிரான்ஸ் சென்று பயற்சியை முடித்துள்ளது. 2-வது இந்திய விமானிகள் குழு பயிற்சிக்காக விரைவில் பிரான்ஸ் செல்ல உள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘‘முதல் கட்டமாக வரும் ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலா விமானப் படைத்தளத்திலும், 2-ம் கட்டமாக வரும் விமானங்கள் மேற்கு வங்கம் ஹசிமரா தளத்திலும் நிறுத்தப்படும். மொத்தம் 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள். இதில் இரட்டை இருக்கை கொண்டவை, ஒரு இருக்கை கொண்டவை போர் விமானம். இந்த இரு படைத்தளத்திலும் ரஃபேல் விமானங்களை நிறுத்தவும், பராமரிக்கவும் ரூ.400 கோடிக்கு உள்கட்டமைப்பு வசதிகளை விமானப் படை செய்துள்ளது” எனத் தெரிவித்தன.

SCROLL FOR NEXT