உத்தரப் பிரதேசத்தின் ஒரய்யா மாவட்டத்தில் இன்று அதிகாலை புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரியும், மற்றொரு லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். 36 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த மரணங்கள் வர்ணிக்க முடியா துயரத்தை ஏற்படுத்துகிறது என்றும், இவை மரணங்கள் அல்ல கொலைகள் என்றும் ஆவேசமாகக் கூறியுள்ளர்.
மோதிக்கொண்ட இரண்டு லாரிகளிலுமே புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்தனர். இந்தக் கோர விபத்து அதிகாலை 3 மணி முதல் 3.30 மணிக்குள் நிகழ்ந்தது.
இதனையடுத்து அகிலேஷ் யாதவ் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
''உத்தரப் பிரதேச ஒரய்யாவில் 24 ஏழைத் தொழிலாளர்கள் பலியாகியிருப்பது சொல்லொணா துயரத்தை ஏற்படுத்துகிறது. காயமடைந்தோர் குணமடைய என் பிரார்த்தனைகள். எல்லாம் தெரிந்திருந்தும், அனைத்தையும் பார்த்த பிறகும் இதயமற்றவர்களின் மவுனமும், இவர்களை ஆதரிப்பவர்களும் எதுவரை இந்த அலட்சியத்தை நியாயப்படுத்துவார்கள் என்பதையும் பார்ப்போம். இந்த விபத்துகள் மரணம் அல்ல, கொலை''.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.