கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் 20-ம்தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், ஏழுமலையானுக்கு ஆகம சாஸ்திரங்களின்படி நித்யபூஜைகள் நடைபெறுகின்றன.
பக்தர்கள் கூட்டம் இல்லாத இந்த நேரத்தில் திருமலையில் மராமத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. மலைப்பாதைகளில் சுற்றுச்சுவர்கள் எழுப்புவது புதிய சாலைகள் போடுவதுஆகிய பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும், திருமலையில் உள்ளஏழுமலையானின் திருப்பாதங்களாக பக்தர்கள் வணங்கும் ஸ்ரீவாரி பாதம் அமைந்துள்ள இடம் வரை தற்போது பேருந்து வசதி இல்லாததால் பக்தர்கள் அங்கு செல்ல முடிவதில்லை. கார், பைக் வைத்திருப்பவர்கள் மட்டும் ஸ்ரீவாரி பாதம் வரை செல்ல முடிகிறது. இதனால் அனைவரும் ஸ்ரீவாரி பாதத்தை தரிசனம்செய்வதற்கு ஏதுவாக அரசு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 2 நாட்களாக ஸ்ரீவாரி பாதம் பகுதிக்கு சோதனை அடிப்படையில் பேருந்துகளை இயக்கினர்.
ஆனால், 2 வளைவுகளில் பேருந்துகளை திருப்ப முடியாமல் போனதால், சாலைகளை அகலப்படுத்தி, புதிய சாலைகள் போடப்பட்ட பின்னர் பேருந்துகளைஇயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்து கோயில் திறக்கப்பட்டபின் ஸ்ரீவாரி பாதம் இருக்கும் இடத்துக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிகிறது.