எதிர்க்கட்சிகள் எங்களை பாராட்ட வேண்டாம், ஆனால் விமர்சிக்காமல் இருக்கலாம் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார்.
இன்று அறிவிக்கப்பட்டுள்ள மூன்றாவது நடவடிக்கையானது விவசாயம், பால்பொருள் மற்றும் மீன்வளம் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துகிறது என்று நிதியமைச்சர் தெரிவித்தார். இதனை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பாராட்டியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
‘‘மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புக்காக மத்திய அரசு இன்று அறிவித்துள்ள திட்டங்களால் விவசாயிகளின் வருமானம் கணிசமாக உயரும். இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர்கள் எங்களை விமர்சிக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் எங்களை பாராட்ட வேண்டாம். ஆனால் விமர்சிக்காமல் இருக்கலாம்’’ எனக் கூறினார்.