கோப்புப்படம் 
இந்தியா

யானைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒருவகை காசநோய்; மத்திய அரசுக்கு பீட்டா எச்சரிக்கை

ஐஏஎன்எஸ்

யானைகளிடம் இருந்து மனிதர்களுக்கு ஒருவகையான காசநோய் பரவும் அச்சம் அதிகரித்து இருப்பதால், பொது நிகழ்ச்சிகள், விழாக்கள், பண்டிகைகளில் யானைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என விலங்குகள் நல அமைப்பான பீட்டா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கரோனா வைரஸ் போன்று மனிதர்களுக்குக் காசநோய் பாதிப்பு ஏற்படுத்திவிடக்கூடாது, யானைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவ அதிகமான வாய்ப்புள்ளது என்று பீட்டா அமைப்பு எச்சரித்துள்ளது.

பீட்டா இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மருத்துவர் மணிலால் வல்லியாட்டே மத்திய கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடித்ததில் கூறப்பட்டுள்ளதாவது:

''பீட்டா அமைப்பு நடத்திய பல்வேறு ஆய்வுகளில் நாட்டில் பல யானைகள் காசநோயால் அவதிப்படுவது தெரியவந்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அமர் கோட்டையில் பயணிகளை அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் யானைகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் காசநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த காசநோய் யானைகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் ஆபத்து அதிகமாகும். ஆதலால் சர்க்கஸ், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பண்டிகைகள், ஊர்வலகங்கள், அணிவகுப்புகள் கோயில் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு யானைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் மனிதர்களைக் காக்கலாம்.

யானைகளை இந்த நேரத்தில் சுதந்திரமாகக் காடுகளில் இயற்கையாக உலவவிடுவது அவசியம். பொது நிகழ்ச்சிகளில் யானைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்தால் மனிதர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

தொடர்ந்து யானைகளைப் பொது நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது மனிதர்களுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்தும். சுற்றுலா, நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். கரோனா வைரஸிலிருந்து நமது தேசம் அதிகமான பாடங்களைக் கற்றுள்ளது.

யானைகளைக் காட்சிப்படுத்துதல், பயிற்சி அளித்தலைத் தடை செய்து மத்திய அரசு உடனடியாக அறிவிக்கை வெளியிட வேண்டும். 1972-வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி கரடிகள், குரங்குகள், புலிகள், சிங்கங்களைக் காட்சிப்படுத்துதல் தடைப் பட்டியலில் இருப்பதைப் போன்று யானையையும் சேர்க்க வேண்டும்.

கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரலில் மத்திய விலங்குகள் நலவாரியம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஜெய்ப்பூரில் பயன்பாட்டில் இருக்கும் யானைகளில் 10 சதவீத எண்ணிக்கையில் உள்ள யானைகளுக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகியவற்றில் 600 யானைகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் ஆசிய யானைகளுக்கு அறிகுறி இல்லாத காசநோய் இருப்பது கண்டறியப்பட்டு கடந்த 2012-ம் ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் யானைகளிடம் இருந்து பாகனுக்கும், மனிதர்களிடம் இருந்து யானைகளுக்கும் காசநோய்(M. tuberculosis) பரவும் ஆபத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

2016-ம்ஆண்டு வெளியான மருத்துவ அறிக்கையில், யானைகளிடமிருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடம் இருந்து யானைகளுக்கும் காசநோய் பரவ ஆதாரங்கள் உள்ளன. இது தொடர்பாக 800 யானைகளுக்குப் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இது தொடர்பான அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் குடியரசு தின அணிவகுப்பில் யானைகளைப் பயன்படுத்த கடந்த 2008-ம் ஆண்டு தடை செய்தது''.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT