இந்தியா

கேரள காங்கிரஸ் கட்சியின் 3 எம்பி, 2 எம்எல்ஏக்களுக்கு தனிமையில் இருக்க உத்தரவு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவுவதைத்தடுப்பதற்காக கேரள மாநில எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த வாரம் மலப்புரத்தைச் சேர்ந்த சிலர் தமிழகப் பகுதிகளில் இருந்து பாலக்காடு மாவட்டத்துக்குள் செல்ல முற்பட்டனர். ஆனால், அவர்களை வயலார் எல்லையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கேரள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரெம்யா ஹரிதாஸ், டி.என். பிரதாபன், வி.கே. ஸ்ரீகண்டன், எம்எல்ஏக்கள் அனில் அக்காரா, ஷபி பரம்பில் ஆகியோர் அங்கு சென்று இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கேரளாவுக்குள் செல்லமுயன்ற இளைஞர் மயங்கி விழுந்தார். அவர் பாலக்காடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இந்நிலையில், அந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் பாதிப்புஇருப்பது கடந்த 11-ம் தேதி உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, வயலார் எல்லையில் குறிப்பிட்டதினத்தில் பணியில் இருந்த போலீஸார், அரசு அதிகாரிகள் ஆகியோரை பாலக்காடு மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தியுள்ளது. இதேபோல, அப்பகுதிக்குச் சென்ற 5 எம்.பி., எம்எல்ஏக்களையும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, அவர்களும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். எனினும், இந்த நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சி என காங்கிரஸார் குற்றம்சாட்டி வருகின்றனர்.

SCROLL FOR NEXT