மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மே 17-ல் முடிந்த பிறகு மெட்ரோ ரயில் மற்றும் நகரப் பேருந்து சேவையை தொடங்க டெல்லி அரசு தயாராகி வருகிறது.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க, தேசிய அளவிலான ஊரடங்கு மே 17 வரை அமலாக்கப்பட்டுள்ளது. இது நீட்டிக்கப்படுமா அல்லது சில மாற்றங்களுடன் தொடருமா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
இதில் சூழலுக்கு ஏற்றபடி டெல்லியில் பொதுப் போக்குவரத்து சேவையை தொடங்க ஆம் ஆத்மி அரசு தயாராகி வருகிறது. இதற்காக மெட்ரோ ரயில்கள் மற்றும் நகர அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் இருக்கைகளில் மாற்றங்களை செய்து வருகிறது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் காய்ச்சலை அறிவதற்கான தெர்மல் சோதனை, கைகளை சுத்தப்படுத்துதல், உடைமைகள் பரிசோதனை ஆகியவற்றுடன் ரயில்களில்சமூக இடைவெளி கட்டாயமாக பின்பற்றப்படும்.
ரயில் பயணிகள் ஒரு இருக்கை விட்டு மறு இருக்கையில் அமரும்படி அதில் குறியீடுகள் ஒட்டப்பட்டு வருகின்றன. ரயில் நிலையமேடைகள் மற்றும் படிக்கட்டு கைப்பிடிகளிலும் கரோனா பரவாதபடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன. ரயில் பயணிகள் அனைவரும்ஆரோக்ய சேது செயலியை தங்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள்.
பயணக் கட்டணத்துக்கான டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டு ப்ரீபெய்டு அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். டெல்லியில் 2,200 மெட்ரோ ரயில்கள் ஓடுகின்றன. 264 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 500-க்கும் மேற்பட்ட லிப்ட் மற்றும் 1100 எஸ்கலேட்டர்கள் உள்ளன. இவற்றை அவ்வப்போது கிருமிநாசினிகளால் சுத்தம்செய்ய கூடுதல் பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதேபோல, டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். ஒருபேருந்துக்கு 22 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நின்றபடி பயணம் செய்ய அனுமதி இல்லை.
இப்பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதுபோன்ற சில நிபந்தனைகளுடன் வாடகை ஆட்டோ, வாடகை காரும் டெல்லியில் அனுமதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.