கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள இடமுலக்கல் கிராமத்தைச் சேர்ந்த ஜான்குட்டி என்பவரின் வீட்டு தோட்டத்தில் பலா மரம் உள்ளது. அந்த மரத்திலிருந்த ஒரு பழம் மிகப்பெரியதாக இருந்ததை கண்ட ஜான்குட்டி, அதை வெட்டி எடுத்தார். அதன் எடை 51.4 கிலோவாக இருந்தது. 97 செ.மீட்டர் நீளம் கொண்ட அந்தப் பழத்தைக் கண்டு திகைப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார் ஜான்குட்டி. இது உலக சாதனையாக இருக்கும் என்று கருதிய அவர், தற்போது உலக சாதனை படைத்துள்ள பலாப்பழம் பற்றிய விவரத்தைத் தேடினார். அதில் 42.7 கிலோ எடை கொண்ட பலாப்பழம்தான் இப்போதைக்கு உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றிருந்தது தெரியவந்தது. அந்த பலாப்பழம் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள தோட்டத்தில் விளைந்ததையும் ஜான் குட்டி கண்டறிந்தார்.
இந்நிலையில், தனது தோட்டத்தில் விளைந்த பலாப்பழம் இப்போதைய உலக சாதனையை மிஞ்சிவிட்டதால், தனது பழத்தை உலக சாதனையாக அங்கீகரிக்கக் கோரி, கின்னஸ் உலக சாதனை மற்றும் லிம்கா சாதனை அமைப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளார். மனிதர்கள் படைக்கும் சாதனைகளும் இயற்கையின் அதிசயங்களும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.