மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், சமீபத்தில் மேற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். கரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் வகையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தற்போது இந்தியாவில் தங்கியுள்ள தங்கள் நாடுகளில் பணியாற்றும் (இந்தியர்கள்) மருத்துவ பணியாளர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சரும் இதே கோரிக்கையை வைத்தார். அதை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்றுக் கொண்டார். அதன்படி, சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய மருத்துவர்கள், நர்சுகள்உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் 835 பேரை சவுதி அரேபியா திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, முதல் மருத்துவ குழுவினர் கடந்த புதன்கிழமையன்று கொச்சியில் இருந்து விமானம் மூலம் சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றனர்.
மருத்துவ குழுவினரை அழைத்துச் செல்ல சவுதி அரசுக்கு சொந்தமான சவுதியா விமான நிறுவனம், வரும் 16, 20, 23-ம் தேதிகளில் கொச்சியில் இருந்து சிறப்பு விமானங்களை இயக்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் அங்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.