மேற்கு வங்க முதல்வர் மம்த பானர்ஜி பேட்டி அளித்த காட்சி: படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

6 ஆண்டுகளாக சுயசார்பு பொருளாதாரத்தை மோடி பேசாதது ஏன்? மத்திய அரசின் பொருளாதார மீட்புத் திட்டம் மிகப்பெரிய பூஜ்ஜியம்; மம்தா பானர்ஜி விமர்சனம்

பிடிஐ

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதி்க்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியாக பிரதமர் மோடி அறிவித்துள்ள பொருளாதார மீட்புத் தி்ட்டம் மிகப்பெரிய பூஜ்ஜியம். அதனால் மாநிலங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 கோடி மதிப்பிலான பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். அதில் முதல் கட்டமாக ரூ.6 லட்சம் கோடிக்கான பொருளதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவி்த்தார்.

இந்த அறிவிப்பு குறித்து மேற்கு வங்க முதல்வரும், திரிணமூலம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஊடகங்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கரோனா வைரஸ், லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி பொருளாதாரத் தி்ட்டம் மிகப் பெரிய பூஜ்ஜியம்.

கரோனா வைரஸ் காலத்தில் மத்திய அரசு மக்களைத் தவறாக வழிநடத்துகிறது. மாநில அரசுகளின் நிதியைக் காலி செய்யும் நோக்கில் மத்திய அரசு திட்டமிட்டு நடக்கிறது.

மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மீட்புத்திட்டம் ஒன்றுமில்லை, மிகப்பெரிய பூஜ்ஜியம். மக்களை முட்டாளாக்கும் கண்துடைப்பு அறிவிப்பு. அமைப்புசாரா தொழில்கள், பொதுமக்களுக்குச் செலவிடுதல், வேலைவாய்ப்பு உருவாக்கம் என எதற்கும் திட்டம் இல்லை.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வெவ்வேறு தகவல்களைத் தெரிவிக்கின்றனர். பிரதமர் மோடி செவ்வாய்கிழமை ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார மீட்புத் தி்ட்டத்தை அறிவித்தார். இதனால் மாநில அரசுகளின் நலன் காக்கப்படும் என நம்பினோம். மாநில அரசுகள் கடன் வாங்கும் அளவு அதிகரிக்கப்படும் என நம்பி இருந்தோம். ஆனால், பிரதமர் மோடி கூறியது அனைத்தும் வார்த்தை ஜாலம் என நிதியமைச்சரின் அறிவிப்பின் மூலம் தெரியவந்தது.

விவசாயிகள் கடன் ஏன் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதுபோன்ற பொருளாதாரத் திட்டங்களை அறிவித்து மக்களைத் தவறாக மத்திய அரசு வழிநடத்துகிறது. இந்தப் பொருளதாாரத் திட்டத்தால் மாநில அரசுகளுக்கு என்ன பலன். நிதிச்சுமையோடு இருக்கும் மாநிலங்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. கூட்டாட்சித் தத்துவத்தை மத்திய அரசு நசுக்குகிறது.

நிதியில்லாமல் மாநில அரசுகள் எவ்வாறு இயங்கும். மத்திய அரசின் இந்தச் செயல்பாடு மாநில அரசுகளி்ன் உரிமைகளைப் பறித்து, நிதிரீதியாக திவாலாக்கும் திட்டமிட்ட முயற்சியாகும். இதைக் கண்டிக்கிறேன். இது ஜனநாயகமுறை அல்ல.

நாங்கள் ஒரு பைசா தரமாட்டோம், மாநில அரசிடம் வருவாய் இல்லை, கொந்தளித்து இருக்கிறோம். கரோனா வைரஸ் பிரச்சினையையும் வெற்றிகரமாகக் கையாள மத்திய அரசு தவறிவிட்டது. பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, போலியான செய்திகள், வீடியோக்களை வெளியிட்டு சமூக வன்முறையைத் தூண்டி விடுகிறது. தங்களின் தோல்விகளை மறைக்கிறது.

இப்போது சுயசார்பு பொருளாதாரத்தை அறிவிக்கும் பிரதமர் மோடி ஏன் 6 ஆண்டுகளாகத் திட்டமிடவில்லை. இத்தனை ஆண்டுகளாக என்ன செய்தார்கள்?''.

இவ்வாறு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

SCROLL FOR NEXT