ஆரோக்ய சேது’ செயலி அறிமுகம் செய்யப்பட்ட 41 நாட்களில் அதை பதிவிறக்கம் செய்தோர் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவலை எளிதில் அடையாளம் காணும் வகையில், தொழில்நுட்பத்தின் உதவியைக் கொண்டு இந்த ’ஆரோக்ய சேது’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி நம்மைச் சுற்றியுள்ள பகுதியில், நம்மோடு தொடர்புடைய நபர்களுக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள உதவுகிறது. இதன் அடிப்படையில் நாம் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறோமா என்பதை உறுதி செய்துகொள்ள முடிகிறது.
‘நிதி ஆயோக்' அமைப்பினால் ஏப்ரல் 2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலியை, கூகுள் பிளேஸ்டோர், ஆப்பிள் ஆப்ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நிதி ஆயோக் அமைப்பின் சிஇஓ அமிதாப் காந்த் தனது ட்விட்டர் பதிவில், “ஆரோக்ய சேது செயலி அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று நாட்களில் 50 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்தனர். அதன் பின்னர் மக்களிடையே இந்த செயலி குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க, பதிவிறக்க எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது 10.02 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்” என கூறியுள்ளார்.