வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வர, ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தை மத்திய அரசு மீண்டும் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் திரும்ப 327 இந்தியர்கள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். இவர்கள் ஏர் இந்தியா விமானத்தில் நாடு திரும்புகின்றனர்.படம்: பிடிஐ 
இந்தியா

2-ம் கட்டமாக 30,000 இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள்: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானத்தில் தாயகம் அழைத்து வரும் திட்டத்துக்கு ‘வந்தே பாரத்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு 64 விமானங்கள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “வந்தே பாரத் திட்டத்தில் முதல் கட்டமாக 64விமானங்களில் 14,800 இந்தியர்களை தாயகம் அழைத்து வருகிறோம். இதில் இன்று (நேற்று) காலை வரை 8,500 பேர் வந்துவிட்டனர். மற்றவர்கள் வெள்ளிக்கிழமைக்குள் வந்துசேருவார்கள். இரண்டாவது கட்டத்தில் இவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். மே 16 முதல்மே 22 வரை 31 நாடுகளுக்கு 149 விமானங்கள் இயக்கப்படும். இதன் மூலம் 30 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்படுவார்கள். இதில் ஆஸ்திரேலியா (7), ரஷ்யா (6), கனடா (5)ஆகிய நாடுகளுக்கு அதிக விமானங்களை இயக்குகிறோம். இவை தவிர அர்மீனியா, ஜப்பான், நைஜீரியா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கும் விமானங்களை இயக்குகிறோம்” என்று கூறியுள்ளார்.

ஏர் இந்தியா அதிகாரிகள் கூறும்போது, “இரண்டாவது கட்ட பட்டியலில் தாய்லாந்து, பெலாரஸ், பஹ்ரைன், வங்கதேசம் ஆகிய நாடுகளும் உள்ளன. ஏர் இந்தியாவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸும் 149 விமானங்களை இயக்கும்” என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT