அதிக வேலை செய்யும் காவலர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டியுள்ளதால் மத்திய ஆயுதப்படை போலீஸை அனுப்பிவைக்க வேண்டுமென மத்திய அரசிடம் மகாராஷ்டிரா மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டிலேயே அதிகஅளவில் கரோனா பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் காவல்துறையினர் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான சம்பவங்களும் உண்டு. 55 வயதுக்கு அதிகமான காவலர்கள் பணிக்கு வரவேண்டாம் வீட்டில் இருக்கலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஏற்கெனவே மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முப்பத்திரண்டு கம்பெனிகள் மகாராஷ்டிராவில் நிறுத்தப்பட்டு மாநில காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎஃப்) யை அனுப்பிவைக்கும்படி மகாராஷ்டிரா அரசு கோரியுள்ளது.
இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியதாவது:
மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சிஏபிஎஃப் கம்பெனிகளை பணியில் அமர்ந்தும்படி மத்தி அரசிடம் கோரியுள்ளோம்.
அப்போதுதான் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான லாக்டவுனில் அதிக வேலை செய்பவர்களுக்கு சிறிது ஓய்வு அளிக்க முடியும் என்பதையும் தெரிவித்துள்ளோம்.
மகாராஷ்டிரா காவல்துறையின் பணியாளர்கள் மாநிலத்தில் கோவிட் 19 பரவுவதைக் கட்டுப்படுத்த அல்லும் பகலும் கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் ஏராளமான காவல் பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர்களுக்கு சிகிச்சை பெறவும் குணமடையவும் தகுந்த நேரம் தேவைப்படுகிறது. அது மட்டுமின்றி சில நாட்களில் ஈத் பண்டிகை வர உள்ளது, அதற்கான சரியான சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய வேண்டும்.
அதற்காக ஏற்கெனவே பணியில் ஈடுபட்டு விடுமுறைகூட எடுக்கமுடியாமல் உழைத்துவரும் காவல்துறையினர் சிறிது ஓய்வு எடுக்க வேண்டும். எனவே, சிஏபிஎஃப்பை அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளோம்.
இவ்வாறு மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்தார்.