இந்தியா

ஜம்மு காஷ்மீர் கிராமத்தில் வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கிச் சூறையாடிய போலீஸார்- கேமராவில் பதிவு

செய்திப்பிரிவு

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொழுகைகளை நிறுத்தியதாகக் கருதப்படும் போலீஸார் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து போலீஸார் சிலர் கிராமத்தில் கடைகளை உடைத்து சூறையாடிய காட்சி மொபைல் போன் கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது.

இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் தலைமை கடைகளைச் சூறையாடிய போலீஸார் குறித்த விவரங்களைக் கேட்டுள்ளார். நாசருல்லாபுரா கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் கூறும்போது கரோனா தொற்று லாக் டவுன் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட மக்களை போலீஸார் தொடர்ந்த் குறிவைத்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.

இந்தக் கிராமம் ஸ்ரீநகரிலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ளது.

“வெள்ளிக்கிழமை தொழுகைகளை நடக்கவிடாமல் செய்ததால் பட்காம் போலீஸ் தலைமை அதிகாரியை சிலர் தாக்கினர். அவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து ஒரு 40 போலீஸார் லாரிகளில் வந்திறங்கி வீடுகளையும் கடைகளையும் அடித்து நொறுக்கினர்.

போலீஸ் அதிகாரியைத் தாக்கியவர்களை தண்டிக்க வேண்டியதுதான் ஆனால் தனிமனித சொத்துக்களை எப்படி சூறையாடலாம்?” என்று பஞ்சாயத்து தலைவர் குலாம் முகமட் தார் வேதனை தெரிவித்தார்.

கடைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் அத்தியாவசியப் பொருட்கள், மதிப்பு மிக்க பொருட்களை போலீஸார் எடுத்துச் சென்றதாக கிராமத்தினர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.

மேலும் உள்ளூர்வாசிகள் போலீஸாரைத் தாக்கியதற்காக 4 நாட்கள் இந்த கிராமத்தில் போலீஸார் ரெய்டு நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அப்துல் ஹமீத் பட் என்பவர் கூறும்போது, “என்னெவெல்லாம் சேர்த்தோமோ அத்தனையும் போய்விட்டது” என்றார். இவரது உறவினர் லதீபா கூறும்போது, நான் ஒரு அனாதை. என்னையும் என் சகோதரியையும் என் மாமாதான் காப்பாற்றி வருகிறார். ஆனால் இவரது சொத்துக்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கி விட்டனர் போலீஸ். அவர் எப்படி இனி குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்?” என்றார் வேதனையை அடக்க முடியாமல்.

-ஏஜென்சி செய்திகள்

SCROLL FOR NEXT