ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸால் இயக்கப்படும் 43 விமானங்களில் இந்தியாவுக்கு மே 7-ம் தேதி தொடங்கி கடந்த 6 நாட்களில் 8503 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்தியர்களை தனது தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாக இந்திய அரசு வந்தேபாரத் மிஷனை மே 7 ஆம் தேதி துவக்கி வைத்துள்ளது. இந்த பணியின் கீழ், இந்தியர்களை மீண்டும் தங்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்காக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் வெளி விவகார அமைச்சகம் ஆகியவை மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது.
ஏர் இந்தியாவும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸும் இணைந்து 12 நாடுகளுக்கு மொத்தம் 64 விமானங்களை (ஏர் இந்தியா - 42 மற்றும் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் - 24) இயக்குகின்றன. முதல் கட்டமாக 14,800 இந்தியர்களை அமெரிக்கா, இங்கிலாந்து, பங்களாதேஷ், சிங்கப்பூர், சவுதி அரேபியா, குவைத், பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து அழைத்து வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மிகப்பெரும் விமான வெளியேற்றும் பணியில் ஒவ்வொரு செயல்பாடும் அரசு மற்றும் சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் வகுத்துள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார நெறிமுறையை கண்டிப்பாக பின்பற்றுகிறது. MoCA, இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை இந்த முக்கியமான மருத்துவ வெளியேற்றப் பணிகளில் பயணிகள், பணியாளர்கள் மற்றும் விமான நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில் எந்தவொரு தளர்வையும் அளிக்கவில்லை.
அரசாங்க வழிகாட்டுதல்களின்படி விரிவான மற்றும் மிக உன்னிப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.