அம்பேத்கர் லண்டனில் படித்தபோது அவர் தங்கியிருந்த வீட்டை வாங்கும் முயற்சியில் மகாராஷ்டிர அரசு ஈடுபட்டுள்ள நிலையில், இப்பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அம்மாநில சமூகநீதித் துறை அமைச்சர் ராஜ்குமார் படோலி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நாக்பூரில் கூறும்போது, “லண்டனில் அம்பேத்கர் வீட்டை வாங்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த சொத்து விரைவில் அரசின் கைக்கு வரும்.
2,050 சதுர அடி பரப்பளவிலான அந்த வீட்டை மதிப்பிடுவதற்கு லண்டனில் இந்தியத் தூதரகம் மூலம் 2 மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் ஒருவர் ரூ.29 கோடி என்றும் மற்றொருவர் ரூ.21 கோடி எனவும் மதிப்பிட்டுள்ளனர். இந்த வீட்டை வாங்க மகாராஷ்டிர அரசு ரூ.40 கோடி ஒதுக்கியுள்ளதால் இதில் எவ்வித சிரமமும் இருக்காது.
கட்டிட புனரமைப்பு மற்றும் வரும் காலத்தில் அதை பராமரிப்பதற்கு லண்டனில் உள்ள இந்தியத் தூதர் தலைமையில் குழு அமைக்கப்படும். கட்டிடம் மகாராஷ்டிர அரசின் வசம் வந்த பிறகு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகும். இந்த அனைத்து பணிகளும் இன்னும் 15 - 20 நாட்களில் முடிவடையும்” என்றார்.