இந்தியா

கேரளாவில் கரோனா பரவல் 1 சதவீதம்தான்: முதல்வர் பினராயி விஜயன்

கா.சு.வேலாயுதன்

கேரளத்தில் கரோனா பரவல் 1 சதவீதம்தான் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது:

''கேரளத்தில் நேற்று 5 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், தலா ஒருவர் பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள். வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 4 பேர் சமீபத்தில் வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் வந்தவர்கள். ஒருவர் சென்னையிலிருந்து வந்துள்ளார். நேற்று யாருக்கும் நோய் குணமாகவில்லை. அதேபோல கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 95.

கேரளத்தில் இதுவரை கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 524 ஆகும். தற்போது 32 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 23 பேருக்குக் கேரளாவுக்கு வெளியில் இருந்துதான் வைரஸ் பரவியுள்ளது. 11 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். சென்னையிலிருந்து 6 பேரும், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து 4 பேரும், டெல்லி நிஜாமுதீனிலிருந்து 2 பேரும் வந்துள்ளனர். ‘கோவிட்-19’ நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 9 பேருக்குக் கரோனா பரவியுள்ளது.

இதில் 6 பேர் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சென்னை கோயம்பேடு காய்கனிச் சந்தையிலிருந்து வந்த ஒரு லாரி ஓட்டுநரின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், அதே லாரியில் வந்த கிளீனரின் மகன் மற்றும் அவருடன் தொடர்பில் இந்த 2 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.

கேரளத்தில் தற்போது மொத்தம் 31,616 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 31,143 பேர் வீடுகளிலும், 473 பேர் மருத்துவமனையிலும் உள்ளனர். இதுவரை 38,547 பேரின் உமிழ்நீர் மாதிரிகளைப் பரிசோதித்ததில் 37,727 பேருக்குக் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. சுகாதாரத் துறையினர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள பகுதிகளைச் சேர்ந்த 3,914 பேரின் உமிழ்நீர் மாதிரிகளைப் பரிசோதித்ததில் 3,894 பேருக்குக் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

கேரளத்தில் தற்போது நோய் தீவிரத்தோடு 34 பகுதிகள் உள்ளன. திருவனந்தபுரம், ஆலப்புழா மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் தற்போது கரோனா நோயாளிகள் யாருமில்லை. இதுவரை வெளிமாநிலங்களிலிருந்து கேரளத்துக்கு 33,116 பேர் சாலை வழியாக வந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் 1,406 பேரும், கப்பல் மூலம் 833 பேரும் வந்துள்ளனர். மாநிலத்துக்கு வெளியே இருந்து வந்தவர்கள் மூலம் 70 சதவீதம் பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்ததால் 30 சதவீதம் பேருக்கும் கரோனா பரவியுள்ளது.

கேரளத்தில் கரோனா பரவலானது தற்போது 1 சதவீதத்துக்குக் கீழேதான் உள்ளது. உயிரிழப்பு விகிதமும் மிகவும் குறைவு. வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 19,000 பேர் சிவப்பு மண்டலங்களிலிருந்து வந்துள்ளனர். மே 7-ம் தேதி முதல் வெளிநாட்டிலிருந்து வந்த 7 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வந்த விமானத்தில் இருந்த அனைவரும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை 1,33,000 பேர் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 72,800 பேர் சிவப்பு மண்டலங்களைச் சேர்ந்தவர்கள். 89,950 பேருக்கு இதுவரை இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 45,157 பேர் சிவப்பு மண்டலங்களைச் சேர்ந்தவர்கள். வெளி மாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் வர உள்ளவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்படும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ‘கோவிட்- 19 ஜாக்ரதா’ (Covid-19 Jagratha) என்ற இணையதளத்தில் இ-பாஸுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். ரயில்கள் மூலம் வந்துசேரும் பயணிகளுக்கு ரயில் நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். கரோனா அறிகுறி இருந்தால் மருத்துவமனைகளுக்கும், அறிகுறிகள் இல்லாதவர்கள் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

வீடுகளுக்குச் செல்பவர்கள் 14 நாள் தனிமையில் இருக்க வேண்டும். இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் கரோனா அறிகுறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் 14 நாள் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள். ரயில் நிலையங்களில் பரிசோதனை முடிந்த பின்னர் அவர்களை அழைத்துச் செல்ல வரும் வாகனத்தில் ஓட்டுநர் மட்டுமே இருக்க வேண்டும். வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கூடுதல் வசதி ஏற்படுத்தப்படும்.

மாநிலங்களுக்குள் ரயில் போக்குவரத்தையும், மெட்ரோ ரயில் போக்குவரத்து மற்றும் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்தையும் அனுமதிக்க வேண்டும். தற்போது ஏசி ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது வைரஸ் பரவலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, ஏசி இல்லாத ரயில்களை இயக்க வேண்டும். கேரளத்தில் சாலையோரங்களில் முகக்கவசம் விற்பது கட்டுப்படுத்தப்படும். பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. ஆனாலும் ஜூன் 1-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

SCROLL FOR NEXT