லடாக்கில் இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் சீன ஹெலிகாப்டர்கள் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - சீனா எல்லையை ஒட்டியுள்ள லடாக் யூனியன் பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் சீன ஹெலிகாப்டர்கள் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே சீன ஹெலிகாப்டர்கள் பறந்த நிலையில், எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்தியவிமானப்படை உஷார்படுத்தப்பட்டு, விமானப்படையின் சூ- 30 ரக போர் விமானங்கள் அப்பகுதிக்கு விரைந்தன. லடாக் எல்லையை ஒட்டிய பகுதியில் இந்திய போர் விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு ரோந்து சென்றதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். சீன ஹெலிகாப்டர்கள் இந்திய எல்லைக்குள் வரவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
சீன ஹெலிகாப்டர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து செல்வது வழக்கம்தான் என்றும் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களும் ரோந்துப் பணியில் ஈடுபடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த வாரம் சிறிய மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் கற்களை வீசினர். இதில் சிலர் காயமடைந்தனர். பின்னர், உள்ளூர் கமாண்டர்கள் அளவில் இருதரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு நிலைமை சீரானது. எனினும், தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.