கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக சீனாவிலிருந்து வெளியேறும் வர்த்தகங்கள், தொழில்கள், பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியா பயனடையும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று பொருளாதார நோபல் அறிஞர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வங்காள மொழி செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “கரோனா பெருவெடிப்புக்கு சீனாதான் காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. சீனாவிலிருந்து வெளியேறும் தொழில்கள், வர்த்தகங்கள், நிறுவனங்களால் இந்தியா பயன்பெறும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதில் உண்மையில்லை.
சீனா தன் யுவான் கரன்சி மதிப்பை குறைத்து விட்டால் என்ன ஆகும்? சீன பொருட்கள் மலிவாகி விடும், அப்போது அவர்களிடமிருந்துதான் வாங்குவார்கள்.
கரோனா நிவாரணத்துக்காக உலக நாடுகள் தங்கள் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபியில் ஒரு கணிசமான பங்கை ஒதுக்குகின்றனர், ஆனால் இந்தியா அவ்வாறு செய்யவில்லை.
மக்களிடம் வாங்கும் திறன் குறைந்து விட்டது, பணம் இல்லை, எனவே மக்களிடம் பணத்தை அளிக்க வேண்டும்.
சாமானிய மக்கள்தான் நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்துகின்றனர். பணக்காரர்கள் அல்ல.
வெளிமாநில தொழிலாளர்கள் பல மாநிலங்களைக் கடந்து தங்கள் சொந்த ஊர் செல்கின்றனர். அதனால் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் அளித்து பராமரிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.
3 முதல் 6 மாத காலங்களுக்கு அவர்களிடம் எமர்ஜென்சி ரேஷன் அட்டைகளை அளிக்க வேண்டும்.
சமூக விலகலுடன் பொருளாதாரத்தையும் எப்படி நடத்த வேண்டும் என்ற கட்டத்தை இன்னும் எட்டவில்லை.
இந்தியாவில் கரோனா பாதிப்பு பற்றி தெரியவில்லை, காரணம் இன்னும் பெருமளவு மக்களுக்கு டெஸ்டிங் செய்யப்படவில்லை. லாக்டவுனை தளர்த்தும் முன் நிறைய டெஸ்ட் செய்ய வேண்டும்.
பரிசோதனைகள் அதிகரிக்க அதிகரிக்க மரண விதிதங்கள் குறையும். மேற்கு வங்கத்தில் டெஸ்ட் அதிகரித்துள்ளது அதனால் மரண விகிதம் குறையும்” என்றார் அபிஜித் பானர்ஜி.